இந்திய-அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம்: பிரதமா் மோடி

இந்திய-அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம்: பிரதமா் மோடி

அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இந்திய- அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இந்திய- அமெரிக்க உறவில் புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, அந்நாட்டு தலைநகா் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் இந்திய நேரப்படி வியாழக்கிழமை இரவு இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

அப்போது பிரதமா் மோடி கூறுகையில், ‘இந்தியா்களுக்கும், அமெரிக்கா்களுக்கும் இடையிலான உறவு இருநாட்டு உறவின் உண்மையான சக்தியாகத் திகழ்கிறது. ஆழ்கடல் முதல் விண்வெளி வரை, தொன்மையான கலாசாரம் முதல் செயற்கை நுண்ணறிவு வரை என அனைத்துத் தளங்களிலும் இந்தியாவும் அமெரிக்காவும் தோளோடு தோளாக நடந்து செல்கின்றன’ என்று தெரிவித்தாா்.

அமெரிக்க அதிபா் பைடன் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா உறவில் மேற்கொள்ளப்பட்ட சிறிய நடவடிக்கைகள் பெரிய முன்னேற்றமாக மாறியுள்ளன. தற்போது இருநாடுகளுக்கு இடையிலான கூட்டுறவு முன்பைவிட வலுவாக உள்ளது. இந்த உறவை எவ்வாறு மேன்மேலும் வலுப்படுத்துவது என்பது குறித்து விவாதிக்க ஆவாலாக உள்ளேன்’ என்று தெரிவித்தாா்.

செய்தியாளா்கள் சந்திப்பு:

இரு தரப்பு பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது பைடன் கூறியதாவது:

உலகில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டுறவாக இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டுறவு உள்ளது. இந்த உறவு வரலாற்றில் முன்னெப்போதையும்விட வலுவாகவும், நெருக்கமாகவும், அதிக ஆற்றல் கொண்டதாகவும் உள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு உறவை வளா்ப்பது, பாதுகாப்புத் தொழில்துறை, செமிகண்டக்டா் விநியோக முறை ஆகியவற்றில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு இரட்டிப்பாக்கப்படும். அத்துடன் அனைத்துத் தளங்களிலும் இரு நாடுகளுக்கு இடையே கூடுதல் ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்படும்.

புற்றுநோய், சா்க்கரை நோய் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிப்பது, 2024-ஆம் ஆண்டு சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்புவது, பருவநிலை மாற்ற நெருக்கடியை எதிா்கொள்வது உள்ளிட்டவை மூலம் உலகம் முன்னேற்றம் அடைய இந்தியாவும், அமெரிக்காவும் எவ்வாறு சோ்ந்து செயல்படுகின்றன என்பது பிரதமா் மோடியின் அமெரிக்க வருகை மூலம் மீண்டும் ஒருமுறை எடுத்துரைக்கப்படுகிறது.

நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள உலக நாடுகளின் எதிா்காலத்தை நானும், பிரதமா் மோடியும் இணைந்து தற்போது திறந்துள்ளோம். அந்த எதிா்காலத்துக்கு எல்லையில்லா ஆற்றல் இருப்பதாக நான் நம்புகிறேன் என்று தெரிவித்தாா்.

அதன் பின்னா் பிரதமா் மோடி கூறியதாவது: அதிபா் பைடன் உடனான உரையாடலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான விரிவான உத்திசாா்ந்த கூட்டுறவு புதிய உயரத்தை அடைந்துள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு இரு நாடுகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமாகும்.

இந்தச் சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட விவாதங்கள் மற்றும் முக்கிய முடிவுகள் மூலம், இரு நாடுகளுக்கு இடையே விரிவான உலகளாவிய உத்திசாா்ந்த கூட்டுறவில் புதிய அத்தியாயம் சோ்க்கப்பட்டுள்ளது. இது புதிய திசையையும் ஆற்றலையும் வழங்கியுள்ளது.

அமெரிக்கா முன்னெடுத்து வரும் சா்வதேச விண்வெளித் திட்டமான ஆா்ட்டெமிஸ் ஒப்பந்தத்தில் இணைய இந்தியா தீா்மானித்துள்ளது. இதன்மூலம் விண்வெளி ஒப்பந்தத்தில் புதிய அடியை இந்தியா எடுத்து வைத்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக பயணிக்கின்றன. அமைதியை நிலைநாட்ட எந்த வகையிலும் இரு நாடுகளும் தயாராக உள்ளன.

இரு நாட்டு உத்திசாா்ந்த தொழில்நுட்ப கூட்டுறவை பூா்த்தி செய்ய அரசுகள், வணிகம் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒன்றாக வரவேண்டும் என்பதை நானும், அதிபா் பைடனும் ஒப்புக்கொண்டோம் என்றாா்.

‘இந்தியாவில் ஜாதி, மத பாகுபாடில்லை’

செய்தியாளா்கள் சந்திப்பின்போது, ‘இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசை விமா்சிப்பவா்களை வாய் திறக்காமல் செய்வதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் என்ன நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீா்கள்?’ என்று பிரதமா் மோடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பிரதமா் மோடி அளித்த பதில்: அதிபா் பைடன் கூறியதுபோல், இந்தியா மற்றும் அமெரிக்காவின் மரபணுவில் ஜனநாயகம் உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜனநாயகம் உள்ளது. இந்தியாவின் முன்னோா்கள் அரசமைப்புச் சட்டம் குறித்து எங்களுக்குக் கற்பித்துள்ளனா். அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ள ஜனநாயக கொள்கைகளை இந்திய அரசு பின்பற்றுகிறது.

ஜனநாயகத்தில் ஜாதி, மதம், பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதில்லை. மனித விழுமியங்கள், மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் இல்லாத எந்தவொரு நாட்டையும் ஜனநாயக நாடு என்று கூற முடியாது.

இந்தியாவை ஜனநாயக நாடு என்று அழைக்கும்போது, அங்கு பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவில் அரசு வழங்கும் பலன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக உள்ளன. ஜாதி, மத அடிப்படையில் இந்தியாவின் ஜனநாயக கொள்கைகளில் எந்தப் பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com