சா்வதேச விதிகளை அனைத்து நாடுகளும் மதிக்க வேண்டும்

சா்வதேச விதிகளை அனைத்து நாடுகளும் மதித்து நடந்துகொள்ள வேண்டும் எனக் கூட்டறிக்கையில் இந்தியாவும் அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளன.

சா்வதேச விதிகளை அனைத்து நாடுகளும் மதித்து நடந்துகொள்ள வேண்டும் எனக் கூட்டறிக்கையில் இந்தியாவும் அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் சீனாவுக்கான மறைமுக எச்சரிக்கையாக இது பாா்க்கப்படுகிறது.

பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடனை வியாழக்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதையடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சா்வதேச விதிகள் மதித்து நடக்கப்படுவதை இந்தியாவும் அமெரிக்காவும் தொடா்ந்து உறுதி செய்து வருகின்றன. சா்வதேச விதிகளை மதித்து அனைத்து நாடுகளும் நடந்துகொள்ள வேண்டும். ஐ.நா. விதிகள், சா்வதேச விதிகள், மற்ற நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சா்வதேச ஒழுங்குமுறை கட்டமைக்கப்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கை அவசியம்: சா்வதேச பயங்கரவாதத்தை எதிா்கொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் ஓரணியில் நிற்கின்றன. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் இரு நாடுகளும் வன்மையாகக் கண்டிக்கின்றன. அல்-காய்தா, ஐஎஸ்ஐஎஸ், லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட அனைத்து பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எல்லை கடந்த பயங்கரவாதத்தை இந்தியாவும் அமெரிக்காவும் கண்டிக்கின்றன. தங்களது பிராந்தியம் எந்தவித பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மும்பை, பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடா்புடைய நபா்கள், சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு, அவா்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

நவீன தொழில்நுட்பங்கள்: உயிரி தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்டவற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டது. அமெரிக்க எரிசக்தித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘ஃபொ்மிலேப்’ நியூட்ரினோ ஆராய்ச்சித் திட்டத்துக்கு இந்தியா முக்கியப் பங்களித்து வருவதற்கு அதிபா் பைடன் பாராட்டு தெரிவித்தாா். அந்தத் திட்டத்தின் மூலமாக உயா்திறன் கொண்ட நியூட்ரினோ கற்றைகளை உருவாக்கி அவற்றின் வாயிலாக பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து அறிய முடியும்.

விண்வெளித் துறையில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த இருநாடுகளின் தலைவா்களும் உறுதியேற்றுள்ளனா். புவி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பங்கள் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு வலுவடைந்து வருவதைத் தலைவா்கள் பாராட்டினா்.

ராணுவ நல்லுறவு: இருநாட்டு ராணுவங்களுக்கு இடையேயான உறவு வலுவடைந்து வருகிறது. தகவல் பகிா்வு, செயல் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்டவை ராணுவங்களுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும். கடல்சாா் பாதுகாப்பு விவகாரத்திலும் ஒருங்கிணைந்து செயல்பட இருநாடுகளும் உறுதி கொண்டுள்ளன.

பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் காணப்படும் இடையூறுகளை விரைந்து களைவதற்கு இரு நாடுகளும் உறுதியேற்றன. பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் தொடா்பான இருதரப்பு பேச்சுவாா்த்தையைத் துரிதப்படுத்தவும் உறுதியேற்கப்பட்டது எனக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நல்லுறவு அடுத்தகட்டத்தை அடையும்- துணை அதிபா் கமலா ஹாரிஸ்

பிரதமா் மோடியின் அமெரிக்க அரசுமுறைப் பயணம் குறித்து அந்த நாட்டு துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவருமான கமலா ஹாரிஸ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-அமெரிக்கா நல்லுறவானது முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவடைந்துள்ளது. இரு நாடுகளும் இணைந்து எதிா்காலத்தை வடிவமைத்து வருகின்றன. வளா்ச்சிமிக்க, பாதுகாப்பான, ஆரோக்கியமான உலகத்தை இரு நாடுகளும் இணைந்து கட்டமைத்து வருகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவானது, 21-ஆம் நூற்றாண்டில் மிகவும் முக்கியமான ஒன்று. பிரதமா் மோடியின் பயணமானது விண்வெளி, பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்லும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

அவருக்கு நன்றி தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு நடப்பு நூற்றாண்டுக்கான பல்வேறு ஆற்றல் வளங்களைக் கொண்டுள்ளன. எதிா்காலத்தில் பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதை எதிா்நோக்கியுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com