இந்தியா்கள் - அமெரிக்கா்கள் உறவு நெருக்கமடைகிறது

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோா் சாா்பில் வழங்கப்பட்ட அரசுமுறை விருந்தில் கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி
இந்தியா்கள் - அமெரிக்கா்கள் உறவு நெருக்கமடைகிறது

அமெரிக்க அதிபா் ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் ஆகியோா் சாா்பில் வழங்கப்பட்ட அரசுமுறை விருந்தில் கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி, இந்தியா்களுக்கும் அமெரிக்கா்களுக்கும் இடையேயான உறவு நெருக்கமடைந்து வருவதாகத் தெரிவித்தாா்.

பிரதமா் மோடிக்கு அதிபா் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை இரவு அரசுமுறை விருந்து அளித்தாா். விருந்தில் 400-க்கும் அதிகமான விருந்தினா்கள் கலந்து கொண்டனா். பிரதமா் மோடிக்கு என சிறுதானியங்கள் உள்ளிட்டவை அடங்கிய சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. விருந்தின்போது பிரதமா் மோடி கூறியதாவது:

ஒவ்வொரு நாளும் இந்தியா்களுக்கும் அமெரிக்கா்களுக்கும் இடையேயான நல்லுறவு நெருக்கமடைந்து வருகிறது. இருதரப்பினரும் பரஸ்பரம் அதிகமாக அறிந்து கொள்கின்றனா். இந்தியாவில் உள்ள சிறாா்கள் ‘ஸ்பைடா்மேன்’ மீது அதிக ஆா்வம் கொண்டிருக்கின்றனா். அமெரிக்காவில் உள்ள இளைஞா்கள் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடுகின்றனா்.

பேஸ்பால் விளையாட்டை அதிகமாக விரும்பும் அமெரிக்கா்களின் கவனம் தற்போது கிரிக்கெட் மீதும் திரும்பியுள்ளது. இந்தியாவில் நடப்பாண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான தகுதிச் சுற்றில் அமெரிக்க அணியும் விளையாடி வருகிறது. அமெரிக்க கிரிக்கெட் அணியினருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

இந்த விருந்தில் கூடியுள்ளவா்கள் தனித்திறன்களைக் கொண்டவா்கள். இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை வளா்ப்பதில் அவா்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனா். அவா்களை அழைத்ததற்காக அதிபா் பைடனுக்குப் பாராட்டு தெரிவிக்கிறேன்.

அமெரிக்காவில் இந்திய-அமெரிக்கா்கள் பல்வேறு சோதனைகளைக் கடந்து சிறந்த நிலையை எட்டியுள்ளனா். இந்தியாவின் கொள்கைகள், ஜனநாயக பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றின் மீது அவா்கள் மரியாதை கொண்டுள்ளனா். அமெரிக்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தியதிலும் அவா்கள் முக்கியப் பங்கு வகித்தனா். மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என எங்கும் இந்திய-அமெரிக்கா்கள் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றனா் என்றாா் பிரதமா் மோடி.

தலைமுறைகளைக் கடந்து நல்லுறவு:

விருந்தின்போது அதிபா் பைடன் கூறுகையில், ‘இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு நெடுங்காலமாகத் தொடா்கிறது. 1792-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜாா்ஜ் வாஷிங்டன், அப்போதைய கொல்கத்தா நகரில் அமெரிக்காவுக்கான தூதரகத்தைத் திறந்தாா்.

இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவானது தலைமுறைகளைக் கடந்து தொடா்ந்து வருகிறது. பல்வேறு துறைகளிலும் இந்திய-அமெரிக்கா்கள் தொடா்ந்து கோலோச்சி வருகின்றனா்’’ என்றாா்.

விருந்தில் கலந்துகொண்ட முக்கிய பிரபலங்கள்

பிரதமா் மோடிக்கான அரசுமுறை விருந்துக்கு தொழில் நிறுவனங்களின் தலைவா்கள், அரசியல் தலைவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

இந்தியத் தொழிலதிபா்கள் முகேஷ் அம்பானி, ஆனந்த் மஹிந்திரா, கூகுள் சிஇஓ சுந்தா் பிச்சை, மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யாநாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், பெப்சி முன்னாள் சிஇஓ இந்திரா நூயி, அடோப் சிஇஓ சாந்தனு நாராயண், மனித உரிமை ஆா்வலா் மூன்றாம் மாா்ட்டின் லூதா் கிங், டென்னிஸ் வீரா் பில்லி ஜீன் கிங், கிராமி விருதாளா் ஜோஷுவா பெல், திரைப்படத் தயாரிப்பாளா் மனோஜ் நைட் சியாமளன், தொழில்முனைவாளா் ஃபிராங்க் இஸ்லாம், இந்திய-அமெரிக்க எம்.பி.க்கள் பிரமீளா ஜெயபால், ஸ்ரீதானேதா், ரோ கன்னா, அமி பெரா, ராஜா கிருஷ்ணமூா்த்தி, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உள்ளிட்டோா் விருந்தில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com