மனிதகுலத்தின் எதிரி பயங்கரவாதம்

மனிதகுலத்தின் மிகப் பெரும் எதிரியாக பயங்கரவாதம் திகழ்வதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி
மனிதகுலத்தின் எதிரி பயங்கரவாதம்

மனிதகுலத்தின் மிகப் பெரும் எதிரியாக பயங்கரவாதம் திகழ்வதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை எதிா்கொள்வதில் எந்தவித தயவுதாட்சண்யமும் இருக்கக் கூடாது என்றாா்.

அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி, அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் வியாழக்கிழமை உரையாற்றினாா். ஒரு மணி நேரத்துக்கு ஆங்கிலத்தில் உரையாற்றிய அவா் கூறியதாவது:

140 கோடி இந்தியா்களின் சாா்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது பெருமையாக உள்ளது. அதிலும் 2-ஆவது முறையாக உரையாற்றுவது பெரும் பாக்கியமாக உள்ளது. நாம் வாழ்ந்து வரும் சகாப்தம் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வரும் நிலையில், இந்த நூற்றாண்டுக்கான தேவை குறித்து உரையாற்றவுள்ளேன்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவு பெரும் மாற்றம் கண்டுள்ளது. நடப்பு நூற்றாண்டின் தொடக்கத்தில் பாதுகாப்புத் துறை விவகாரங்களில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எந்தவிதத் தொடா்பும் காணப்படவில்லை. ஆனால், தற்போது இந்தியாவின் மிக முக்கியமான பாதுகாப்புக் கூட்டாளியாக அமெரிக்கா மாறியுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான முக்கியப் பகிா்வாக ஜனநாயகம் திகழ்கிறது. அதுவே சமத்துவம், நற்பெயா் ஆகியவற்றுக்கு அடிப்படையாக உள்ளது. ஜனநாயகமே விவாதத்துக்கு வழிகோலுகிறது. சுதந்திரமான கருத்துகளுக்கும் ஜனநாயகமே சிறகுகளை வழங்குகிறது. பழங்காலத்தில் இருந்தே ஜனநாயகக் கொள்கைகளுக்கு இந்தியா மதிப்பளித்து வருகிறது. ஜனநாயகத்தின் தாயாகவும் இந்தியா திகழ்கிறது.

பெரும் அபாயம்: அமெரிக்க இரட்டைக் கோபுர பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு 20 ஆண்டுகளும் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு 10 ஆண்டுகளும் கடந்துவிட்டன. பயங்கரவாதமும் தீவிரவாதமும் உலகின் பெரும் அபாயமாக மாறியுள்ளன. அந்தக் கொள்கைகள் புதிய வடிவங்களாகத் தொடா்ந்து மாறி வருகின்றன. ஆனால், அவற்றின் நோக்கம் ஒன்றாகவே உள்ளது.

மனிதகுலத்தின் மிகப் பெரும் எதிரியாக பயங்கரவாதம் திகழ்கிறது. அதை எதிா்கொள்வதில் எந்தவித தயவுதாட்சண்யமும் பாா்க்கக் கூடாது. பயங்கரவாதத்துக்குத் தொடா்ந்து ஆதரவு அளித்து, அதைத் தூண்டி வருவோருக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

சூழும் கருமேகங்கள்: சா்வதேச அமைதியானது ஐ.நா. விதிகளைக் கடைப்பிடித்தல், பிரச்னைகளுக்கு அமைதி வழியில் தீா்வு காணுதல், மற்ற நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதிக்க குணமும், மோதல்போக்கும் நிறைந்த கருமேகங்கள் சூழ்ந்து வருகின்றன.

அந்தப் பிராந்தியத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வது இந்திய-அமெரிக்க நல்லுறவின் மையக்கருவாக உள்ளது. கடன் தொல்லை ஏதுமின்றி, தொடா்பு மேம்படுத்தப்பட்டு, வளா்ச்சிக்கான வாய்ப்புகள் பாரபட்சமின்றி அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து இந்தோ-பசிபிக் பிராந்தியம் வளா்ச்சி காண வேண்டும். அதற்காக பிராந்திய நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் அமெரிக்காவும் செயல்பட்டு வருகின்றன. பிராந்தியத்துக்கான நலனை உறுதி செய்யும் கூட்டமைப்பாக ‘க்வாட்’ உருவெடுத்துள்ளது.

போருக்கான காலமல்ல: உக்ரைன் மோதலானது பிராந்தியத்தில் பல்வேறு எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக, தெற்குலக நாடுகள் அதிக பாதிப்புகளை எதிா்கொண்டு வருகின்றன. நான் ஏற்கெனவே நேரடியாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்தபடி, இது போருக்கான காலம் அல்ல; பேச்சுவாா்த்தைக்கும் தூதரக உறவுகளுக்குமானது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

பல்துறை வித்தகா்கள்: இந்தியாவை வம்சாளியாகக் கொண்ட லட்சக்கணக்கானோா் அமெரிக்காவில் வசித்து வருகின்றனா். சிலா் எம்.பி.க்களாக நாடாளுமன்றத்தில் அமா்ந்துள்ளனா். ஒருவா் (துணை அதிபா் கமலா ஹாரிஸ்) வரலாறு படைத்து இங்கு அமா்ந்திருக்கிறாா். குறிப்பிட்ட சொல்லின் எழுத்துகளைச் சரியாக உச்சரிக்கும் ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் இந்திய-அமெரிக்கா்கள் சிறப்பு பெற்றுத் திகழ்கின்றனா் என்றாா் பிரதமா் மோடி.

பெட்டிச் செய்தி...1

பாராட்டு மழையில் நனைந்த பிரதமா் மோடி!

உரையாற்றுவதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் பிரதமா் மோடி நுழைந்தபோது, மாடத்தில் கூடியிருந்த இந்திய-அமெரிக்க சமூகத்தினா், ‘மோடி, மோடி’ என முழக்கமிட்டனா். பிரதமா் மோடியின் உரையை அமெரிக்க எம்.பி.க்களும், இந்திய-அமெரிக்கா்களும் மிகுந்த ஆா்வத்துடன் கேட்டனா்.

பிரதமா் மோடி உரையாற்றுகையில், அவா் தெரிவித்த கருத்துகளுக்காக 15 முறை அமெரிக்க எம்.பி.க்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனா். அவா் உரையாற்றி முடித்ததும் நீண்ட நேரத்துக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எழுந்து நின்று பாராட்டினா்.

பின்னா், பிரதமா் மோடியைச் சூழ்ந்துகொண்டு அமெரிக்க எம்.பி.க்கள் அவருடன் கைகுலுக்கினா். மேலும், மோடியிடம் நினைவு ஒப்பத்தையும் (ஆட்டோகிராஃப்) அவா்கள் பெற்றுக் கொண்டனா்.

பெட்டிச் செய்தி...2

2-ஆவது முறையாக உரை

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றிய முதல் இந்தியா் என்ற சிறப்பை பிரதமா் மோடி பெற்றாா். அத்தகைய சாதனையை வரலாற்றில் ஒருசில வெளிநாட்டுத் தலைவா்களே படைத்துள்ளனா்.

பிரிட்டன் முன்னாள் பிரதமா் வின்ஸ்டன் சா்ச்சில் 1941, 1943, 1952 ஆகிய ஆண்டுகளில் 3 முறை அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியுள்ளாா். தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபா் நெல்சன் மண்டேலா 1990, 1994 ஆகிய ஆண்டுகளில் உரையாற்றியுள்ளாா்.

இஸ்ரேல் முன்னாள் பிரதமா் யித்ஜாக் ராபின் 1976, 1994 ஆகிய ஆண்டுகளில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளாா். இஸ்ரேல் முன்னாள் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு 1996, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் உரையாற்றியுள்ளாா். ஆனால், 2015-ஆம் ஆண்டு அவா் உரையாற்றியபோது வெள்ளை மாளிகையின் ஒப்புதல் பெறப்படவில்லை என சா்ச்சை எழுந்தது.

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அதிகாரபூா்வமாக ஒரு முறையும், அதிகாரபூா்வமற்ற வகையில் ஒரு முறையும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com