கட்சித் தலைவர் பதவிக்கு இம்ரான் கான் போட்டியிடப் போவதில்லை என அறிவிப்பு

பிடிஐ கட்சித் தலைவர் பதவிக்கு இம்ரான் கான் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார்.

71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார். 

இந்தநிலையில்,  2022ஆம் ஆண்டு, ஏப்ரலில், இம்ரான் கானின் கட்சி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியைச் சந்தித்து ஆட்சி கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பதவி விலகிய அவர்  மீது இதுவரை 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, பரிசுப்பொருள் முறைகேடு, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்ட வழக்கு ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் முதல்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

இந்தநிலையில், இம்ரான் கான் கட்சியின் சின்னமான ’கிரிக்கெட் மட்டை’ சின்னத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள, 20 நாள்களுக்குள் புதிய கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சித் தேர்தலை நடத்துமாறு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியிருந்தது.

கடந்த சில நாள்களாக பிடிஐ கட்சிக்குள் குழப்பமான சூழல் நிலவியதைத் தொடர்ந்து, கடந்த திங்களன்று(நவ.27) நடைபெற்ற கட்சி காரியக் கமிட்டி கூட்டத்தில், உள்கட்சித் தேர்தல் நடத்த அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இம்ரான் கான் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், வரும் பொதுத் தேர்தலில் கட்சியை வழிநடத்த புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சி தேர்தல் டிசம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தநிலையில், பிடிஐ கட்சித் தலைவர் பதவிக்கு இம்ரான் கான் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இம்ரான் கானுக்கு பதிலாக, அவருக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் பாரிஸ்டர் கோஹார் கான் கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட இம்ரான் கானால் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

இதனிடையே, கட்சித் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்து கோஹார் கான் கூறியதாவது, “பிடிஐ கட்சியின் முன்னாள், இந்நாள் மற்றும் வருங்காலத் தலைவராக, இம்ரான் கான் என்றுமே தலைவராக தொடருவார்.. அவர் திரும்பி வரும் வரை, நான் என் கடமையை தொடருவேன்” என்று கூறினார். 

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை, இம்ரான் கானின் கட்சி புதிய தலைவரின் வழிகாட்டுதலின் கீழ் எதிர்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com