அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதியை கொல்ல முயற்சி - இந்தியர் கைது
அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவரை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


நியூயார்க் : அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவரை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக இந்தியாவைச் சேர்ந்த நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அமெரிக்க நீதித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கனடாவில் கடந்த ஜூனில், சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டை இந்தியா முற்றிலும் நிராகரித்திருந்தது. மேலும், இந்த விவகாரம் இந்தியா - கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியிருந்தது.
இந்தநிலையில், தற்போது கனடாவை தொடர்ந்து அமெரிக்காவும் இந்தியர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்கில் வசித்து வரும் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் குர்பட்வாண்ட் சிங் பன்னன் என்ற இந்திய வம்சாவளி நபரை கொலை செய்ய முயற்சித்ததாக எழப்பட்ட புகாரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 52 வயதான நிகில் குப்தா என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர் மீது நியூயார்க் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பந்வந்த் சிங் பன்னுக்கு எதிராக பல பயங்கரவாதக் குற்றச் செயல் வழக்குகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக இந்திய விசாரணை முகமைகள் அவரைத் தேடி வருகின்றன.
அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட, ‘நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பை’ சேர்ந்த குர்பட்வாண்ட் சிங் பன்னனை கொலை செய்ய, இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், குப்தாவை நியமித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குப்தா தனக்கு அறிமுகமான ஒரு நபரிடம் சீக்கிய பிரிவினைவாதியை கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அந்த நபர் அமெரிக்க அரசின் போதைப்பொருள் அமலாக்கத்துறை நிர்வாகத்தின் ரகசிய உளவு அதிகாரியாக இருப்பவர் என்பதை குப்தா அறிந்திருக்கவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவில் குா்பந்வந்த் சிங்கை கொலை செய்ய நடைபெற்ற முயற்சியை அந்நாட்டு அதிகாரிகள் முறியடித்ததாகவும், இது தொடா்பாக இந்திய அரசுக்கு அவா்கள் எச்சரிக்கை விடுத்ததாகவும் ‘தி ஃபைனான்சியல் டைம்ஸ்’ என்ற பிரிட்டன் நாளிதழில் கடந்த வாரம் செய்தி வெளியானது.
இந்தநிலையில், செக் குடியரசில் பதுங்கியிருந்த குப்தாவை கடந்த ஜூனில், அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர். இந்தநிலையில், அவர் விரைவில் அமெரிக்காவின் நியூயார்க் நகர காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூயாா்க் நகரில் வசித்து வரும் குா்பந்த்வந்த் சிங் பன்னுவை கொலை செய்வதற்காக நிகில் குப்தா 1 லட்சம் டாலா்களை கொலையாளிக்கு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். குற்றம் நிரூபிக்கப்பட்டால், கைது செய்யப்பட்டுள்ள குப்தாவுக்கு அதிகபட்சமாக 10 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க மண்ணில், அமெரிக்க குடிமகன்கள் மீதான கொலை முயற்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள அமெரிக்க காவல்துறை, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிக்க யார் நினைத்தாலும், அவர்கள் மீது விசாரணை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து இந்திய அரசிடம் அமெரிக்கா தொடர்ந்து கவலையை வெளிப்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் மீதான கொலை முயற்சி குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய அரசால் கடந்த நவ. 18ஆம் தேதி உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...