இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்

இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்தில் மக்களுக்கு உதவும் வகையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் ஏராளமான மக்கள் வாஷிங்டன் டிசியில் புதன்கிழமை திரண்டனர்.
இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்
இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்


இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்தில் மக்களுக்கு உதவும் வகையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் ஏராளமான மக்கள் வாஷிங்டன் டிசியில் புதன்கிழமை திரண்டனர்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காஸா பகுதியில் இருக்கும் மக்களைக் காக்கும் வகையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வலியுறுத்தி, வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ள கன்னோன் ரொட்டுன்டா வளாகத்துக்கு உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த திடீர் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 300 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உடனடியாக போர் நிறுத்த அறிவிப்பை வலியுறுத்தி கோஷமிட்டனர். சிலர் போர் நிறுத்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானோர் யூத அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 

போராட்டம் காரணமாக, கேபிடோல் ஹில் ஊழியர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் முக்கிய நுழைவாயிலைப் பயன்படுத்தாமல், தரைக்கு அடியில் இருக்கும் சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

திடீர் போராட்டம் காரணமாக, கேபிடோல் கட்டடம் முழுவதையும் காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். கட்டடத்தை சுற்றி தடுப்புகளை வைத்து உள்ளே யாரும் நுழையாத வண்ணம் தடுக்கப்பட்டது. 

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டு வீசியதில் 500 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால், இதனை தாங்கள் நடத்தவில்லை என்று இஸ்ரேல் மறுத்துவருகிறது.

இந்த வளாகத்துக்குள் போராட்டம் நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த வார துவக்கத்தில் இதுபோன்றதொரு போராட்டம் வெள்ளை மாளிகைக்கு அருகே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அப்போதும் பலர் கைது செய்யப்பட்டனர். 

திடீரென கன்னோன் வளாகத்துக்குள் போராட்டம் நடைபெற்ற நிலையில், அந்த வளாகத்துக்குள் மக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com