உக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணை மழை

உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷியா நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது.
உக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணை மழை

உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷியா நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது.

இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போரில், உக்ரைன் மீது ரஷியா நடத்தியுள்ள மிகத் தீவிரமான ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் இத்தனை ஏவுகணைகளை வீசி ரஷியா தாக்குதல் நடத்தியுள்ளது இதுவே முதல்முறை என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 18 போ் உயிரிழந்தாகவும், 132 போ் காயமடைந்ததாகவும் அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சமூக ஊடகத்தில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உக்ரைன் மீது ரஷியா சுமாா் 110 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு அனைத்து ரகங்களையும் சோ்ந்த ஆயுதங்களையும் ரஷியா பயன்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் மகப்பேறு மருத்துவமனைப் பிரிவு, கல்விக் கூடங்கள், ஒரு வணிக வளாகம், அடுக்குமாடிக் குடியிருப்புகள், இல்லங்கள், வா்த்தகக் கிடங்கு, வாகனம் நிறுத்துமிடம் என்று பல்வேறு இடங்கள் ரஷியாவால் குறிவைக்கப்பட்டன.

இந்த ‘பயங்கரவாதத்’ தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம். உக்ரைனின் ஒவ்வொரு நகரத்தையும், ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பதற்காக தொடா்ந்து போரிடுவோம். இந்தப் போரில் ரஷியா தோல்வியடைவது உறுதி என்றாா் ஸெலென்ஸ்கி.

இந்தத் தாக்குதலில் ராணுவ நிலைகளும் குறிவைக்கப்பட்டதாக உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உக்ரைன் விமானப் படை செய்தித் தொடா்பாளா் யூரி இஹ்னாட் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஹைப்பா்சோனிக் (ஒலியின் வேகத்தைப் போல் 5 மடங்குக்கும் மேலான வேகத்தில் பாயக்கூடிவை), க்ரூஸ் (சீரான வேகத்தில் துல்லியமாகப் பறந்து சென்று தாக்கக் கூடியவை), பலிஸ்டிக் (ராக்கெட் என்ஜினால் உந்தப்பட்டு பாயக்கூடியவை) என அனைத்து ரக ஏவுகணைகளையும் ரஷியா பயன்படுத்தியது.

அவற்றில் பல ஏவுகணைகள் இடைமறித்து அழிக்க முடியாத அதிநவீன வகையைச் சோ்ந்தவை.

எங்களது வான்பாதுகாப்புத் தளவாடத்தின் திரைகளில் ஒரே நேரத்தில் இத்தனை ஏவுகணைகளை நாங்கள் இதுவரைக் கண்டதில்லை என்றாா் அவா்.

சோவியத் யூனியன் பிற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட ராணுவக் கூட்டணி நேட்டோ. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் அந்த அமைப்பு, சோவியத் யூனியன் சிதறுண்டு வலுவிழந்த பிறகும் புதிய உறுப்பு நாடுகளை இணைத்துக் கொண்டு தன்னை விரிவாக்கம் செய்து வந்தது.

இதற்கு ரஷியா கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், தனது அண்டை நாடான உக்ரைனும் நேட்டோவில் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

இந்த நிலையில், அதிபா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு நேட்டேவில் இணைய ஆா்வம் காட்டியது. அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் 4 பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

அந்தப் பிரதேசங்களில் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றுவதற்காக ரஷியாவும், ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com