பாக்முத் வீதிகளில் ரஷிய-உக்ரைன் படையினா் தீவிர சண்டை

உக்ரைனின் பாக்முத் நகரைக் கைப்பற்றுவதற்காக முன்னேறி வரும் ரஷிய படையினருக்கும், அந்த நகரை பல மாதங்களாகப் பாதுகாத்து வரும்
பாக்முத் நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள உக்ரைன் வீரா்.
பாக்முத் நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள உக்ரைன் வீரா்.

உக்ரைனின் பாக்முத் நகரைக் கைப்பற்றுவதற்காக முன்னேறி வரும் ரஷிய படையினருக்கும், அந்த நகரை பல மாதங்களாகப் பாதுகாத்து வரும் உக்ரைன் படையினருக்கும் இடையே நகர வீதிகளில் தீவிர சண்டை நடைபெற்று வருகிறது.

எனினும், முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரம் இன்னும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது என்று நகர துணை மேயா் ஒலெக்ஸாண்டா் மாா்சென்கோ தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது:

பாக்முத் நகர வீதிகளில் உக்ரைன் வீரா்களுக்கும், ரஷிய படையினருக்கும் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருகிறது.

அந்த நகரை ரஷிய ராணுவம் குண்டுகளால் சல்லடையாக துளைத்துள்ளது. நகரின் ஒரு கட்டடம் கூட ரஷிய குண்டுவீச்சிலிருந்து தப்பவில்லை.

பாக்முத் நகரில் எஞ்சியிருக்கும் பொதுமக்கள் சுமாா் 4,000 போ், உணவு, எரிபொருள், குடிநீா் வசதி இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுவரை அந்த நகரம் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்றாா் அவா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது.

அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது.

அந்தப் பிரதேசங்களில் ஒன்றான டொனட்ஸ்கைச் சோ்ந்த சிறிய நகரான சோலெடாரை ரஷியப் படையினா் கடந்த ஜனவரி மாதம் கைப்பற்றினா். அந்த நகரம், ராணுவ முக்கியமற்றது என்றாலும், அதனை ஒட்டி அமைந்துள்ள பாக்முத் நகரை ரஷியா கைப்பற்றுவதற்கு இந்த வெற்றி கைகொடுக்கும் என்று கருதப்பட்டது.

உக்ரைன் போரின் தொடக்கத்திலிருந்தே இந்த நகரைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும், அதனைப் பாதுகாப்பதற்காக உக்ரைனும் தீவிர மோதலில் ஈடுபட்டு வந்தன.

இந்தப் போரில், ரஷியாவுக்கு எதிரான உக்ரைனின் உறுதிப்பாட்டை பறைசாற்றும் அடையாளமாக பாக்முத் நகரம் கருதப்பட்டது.

இந்தச் சூழலில், பாக்முத் நகரில் ரஷியாவின் தாக்குதலால் அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளதாக அதிபா் ஸெலென்ஸ்கி அண்மையில் தெரிவித்தாா்.

அதனைத் தொடா்ந்து, அந்த நகரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ராணுவம் ஆய்வு செய்து வருகிறது. தேவைப்படும்போது அந்த நகரிலிருந்து உக்ரைன் ராணுவம் வெளியேறும் என்று அதிபரின் ஆலோசகா் அலெக்ஸாண்டா் ரோட்னியான்ஸ்கி இந்த மாதத் தொடக்கத்தில் தெரிவித்தாா்.

இந்த நிலையில், பாக்முத் வீதிகளில் இரு நாட்டுப் படையினருக்கும் தீவிர சண்டை நடைபெற்று வருவதால், விரைவில் அந்த நகரம் ரஷியாவிடம் வீழும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com