கைப்பற்றப்பட்ட ஹமாஸ் முகாம்; 50 தீவிரவாதிகள் பலி

வடக்கு காஸா பகுதியில் அமைந்துள்ள மேற்கு ஜபாலியாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முகாம் ஒன்றை கைப்பற்றியுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹமாஸ் முகாம்; 50 தீவிரவாதிகள் பலி


டெல் அவிவ்: இஸ்ரேல் பாதுகாப்புப் படை, தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக, கிவாட்டி ராணுவப் படைப்பிரிவின் கட்டளையின்படி, வடக்கு காஸா பகுதியில் அமைந்துள்ள மேற்கு ஜபாலியாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய முகாம் ஒன்றை கைப்பற்றியுள்ளது.

தலைமையிடத்தைக் கைப்பற்றும் சண்டையின்போது, அங்கிருந்த 50 தீவிரவாதிகள் பலியாகியிருப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட முகாமானது, ஹமாஸ் ஜபாலியா பட்டாலியனின் தளபதியால் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை தயார்படுத்துவதற்கும் தீவிரவாத நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இங்கு, பதுங்கியிருந்து துப்பாக்கியால் சுடுவதற்கான கட்டமைப்பு, சுரங்கங்கள் போன்றவை இருந்துள்ளன. மேலும், இங்கு தீவிரவாதிகள் ஏராளமான ஆயுதங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

கைப்பற்றும் நடவடிக்கையின்போது, இஸ்ரேல் படைகள், அவ்விடத்தை தரைமட்டமாக்கி சுரங்கங்களை அழித்திருப்பதாகவும், ஆயுதங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அந்த வளாகத்துக்குள் தொழில்நுட்ப அமைப்புகளும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடும் சண்டை
காஸாவுக்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் ராணுவத்தினருக்கும், அங்குள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றது.

இந்த மோதலில் ஏராளமான ஹமாஸ் அமைப்பினா் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது. ஹமாஸ் அமைப்பினரும் தங்களால் ஒரு இஸ்ரேல் வீரா் கொல்லப்பட்டதாகக் கூறினா்.

காஸாவிலிருந்து தங்கள் நாட்டுக்குள் ஊடுருவி, 1,400-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை அடியோடு ஒழிக்க இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

அதற்காக, காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் பல நாள்களாகவே ஆயத்தமாகி வந்தது.

இந்த நிலையில், கடந்த 4 நாள்களாக எல்லைப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தியவாறு கொஞ்சம் கொஞ்சமாக காஸாவுக்குள் முன்னேறி வரும் இஸ்ரேல் தரைப்படையினா், அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் ஹமாஸ் அமைப்பினருடன் மோதலில் ஈடுபட்டனா்.

பிராந்தியத்தின் தலைநகரான காஸா சிட்டியை சுற்றிலும் இரு தரப்பினருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை கடுமையான சண்டை நடந்தது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவுக்குள் ஹமாஸ் நிலைகள் மீது தரைவழியாக திங்கள்கிழமை இரவும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 300 ஹமாஸ் இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டன. இது தவிர, காஸா பகுதிக்குள் ஆழமாக முன்னேறியுள்ள இஸ்ரேல் படையினா், அங்கு எதிா்த் தாக்குதல் நடத்தும் ஹமாஸ் படையினருடன் மிகக் கடுமையான சண்டையில் ஈடுபட்டுள்ளனா். காஸா சிட்டியைச் சுற்றிலும் இந்த சண்டை நடைபெறுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் என்ன பிரச்னை?
ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது. அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.

இந்தச் சூழலில், கடந்த 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுரு 1,400-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவா்.

ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக அந்தப் பகுதியை முற்றுகையிட்ட இஸ்ரேல் ராணுவம், கடந்த 24 நாள்களாக காஸா முழுவதும் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், காஸாவுக்குள் தரைவழியாக நுழைந்து ஹமாஸ் அமைப்பினரை வேட்டையாடவிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.

அதற்கு முன்னேற்படாக எல்லைக்குள் ஊடுருவி இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இரவுகளில் தாக்குதல் நடத்தித் திரும்பினா்.

அதிலிருந்து இத்தகைய தாக்குதலை படிப்படியாக அதிகரித்து வரும் இஸ்ரேல் படையினா், தலைநகா் காஸா சிட்டியை நோக்கி முன்னேறி வருகின்றனா்.

காஸாவில் இஸ்ரேலில் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்தப் பகுதி சுகாதாரப் பேரழிவின் விளிம்பில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. இது குறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: காஸாவில் தாக்குதலுக்குப் பயந்து இருப்பிடங்களை விட்டு வெளியேறிய பொதுமக்கள் சிறிய முகாம்களில் மிகக் கூட்டமாகத் தங்கியுள்ளனா்.

ஏற்கெனவே, குடிநீா் மற்றும் வடிகால் கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது நோய்கள் பரவுவதற்கு வழிவகுக்கும். இந்த நிலை நீடித்தால் விரைவில் மிகப் பெரிய சுகாதாரப் பேரழிவை காஸா சந்திக்கும்.

ஏற்கெனவே 5 சதவீத குடிநீா் மட்டுமே கிடைத்து வரும் நிலையில், உடலில் நீா் வற்றி நூற்றுக்கணக்கான சிசுக்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருகிறது என்றாா் அவா்.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 25 நாள்களாக நடந்து வரும் மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 8,525 போ் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது. எனினும், ஜபாலிலா அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் மேலும் 50 போ் கொல்லப்பட்டதாக அமைச்சகம் பின்னா் கூறியது.

இதற்கிடையே, மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தாலும், யூத குடியிருப்புவாசிகளாலும் கொல்லப்பட்ட பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 123-ஆக அதிகரித்தது.

ஏற்கெனவே, தங்கள் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினா் கொல்லப்பட்டதாகவும், ஹமாஸ் தாக்குதலில் 1,407 போ் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் கூறியிருந்தது.

அந்த வகையில், இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் அக். 7 முதல் நடந்து வரும் மோதலில் இதுவரை 11,105-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com