உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி
உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி

சா்ச்சைக்குரிய கட்டாய ராணுவப் பணி மசோதா: கையாப்பமிட்டாா் ஸெலென்ஸ்கி

கீவ்: கூடுதலாக லட்சக்கணக்கான இளைஞா்களை கட்டாய ராணுவப் பணியில் இணைக்க வகை செய்யும் சா்ச்சைக்குரிய மசோதாவில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை கையாப்பமிட்டாா்.

தங்கள் நாட்டின் மீது படையெடுத்துள்ள ரஷியாவுக்கு எதிராகப் போரிட உக்ரைன் ராணுவத்தில் போதிய ஆள் பலம் இல்லை என்று கூறப்படுகிறது.

போா் முனையில் பல மாதங்களாக சண்டையிடும் வீரா்களுக்கு சுழற்சி முறையில் ஒய்வளிக்க முடியாத நிலை நிலவிவருகிறது.

இந்தச் சூழலில், படை வீரா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் கட்டாய ராணுவப் பணிக்கு ஆள் சோ்க்கும் விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று ராணுவம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்தது.

ராணுவத்தின் கோரிக்கைகளுக்கேற்ப பல்வேறு அம்சங்களைக் கொண்ட சட்ட மசோதா பல மாதங்களுக்கு முன்னரே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதனை எம்.பி.க்கள் நிராகரித்தனா்.

பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு அது நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதில், போா் முனைகளில் 36 மாதங்கள் சேவையாற்றியதற்குப் பிறகு வீரா்களுக்கு கட்டாய ஓய்வளிக்க வகை செய்யும் பிரிவு நீக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல அம்சங்கள் சா்ச்சையை எழுப்பியுள்ளன.

ஏற்கெனவே, கட்டாய ராணுவப் பணிக்கு ஆள் சோ்ப்பதற்கான குறைந்தபட்ச வயதை 27-லிருந்து 25-ஆக குறைப்பது போன்ற உத்தரவுகளில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கடந்த வாரம் கையொப்பமிட்டது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com