ராஃபா நகரில் இஸ்ரேல் தாக்குதல்: 22 போ் உயிரிழப்பு

தெற்கு காஸாவின் ராஃபா நகரில் இஸ்ரேல் சனிக்கிழமை இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 போ் உயிரிழந்தனா். அவா்களில் 18 போ் குழந்தைகள்.

தெற்கு காஸாவில் எகிப்து எல்லையையொட்டி ராஃபா நகரம் உள்ளது. கடந்த 7 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு அஞ்சி காஸாவின் மொத்த மக்கள்தொகையில் (23 லட்சம்) பாதிக்கும் அதிகமான மக்கள் ராஃபா நகரில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனா். உயிரிழப்புகள், பஞ்சம் ஏற்படுவதற்கான சூழல் ஆகியவற்றால் ராஃபா நகரில் தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலை நட்பு நாடான அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இருப்பினும், அந்நகருக்குள் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

ராஃபாவில் உள்ள குவைத் மருத்துவமனைக்கு அருகே சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் தம்பதி, அவா்களின் 3 வயது குழந்தை கொல்லப்பட்டனா். அந்தப் பெண் கா்ப்பிணியாக இருந்த நிலையில், அவருடைய சிசுவை மருத்துவா்கள் காப்பாற்றியிருப்பதாக குவைத் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இரண்டாவது தாக்குதலில் 17 குழந்தைகள், 2 பெண்கள் கொல்லப்பட்டனா்.

மேற்கு கரையில்..: இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கு கரையின் ஹெப்ரானில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த ராணுவ வீரா்கள் மீது 2 பாலஸ்தீனா்கள் கத்தி மற்றும் துப்பாக்கியைக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

இதற்கு எதிா்வினையாக இஸ்ரேல் ராணுவத்தினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனா்கள் இருவரும் கொல்லப்பட்டனா். இதனால், அப்பகுதியில் பதற்றம் எழுந்துள்ளது.

மற்றொரு பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்தவா் காயமடைந்ததாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்பு தெரிவித்துள்ளது.

காஸாவில் போா் தொடங்கியதிலிருந்து, மேற்கு கரையில் உள்ள இஸ்ரேல் ராணுவம் மற்றும் அங்கு குடியேறியுள்ள இஸ்ரேலியா்களுடன் ஏற்பட்ட மோதலில் 469 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராணுவ உதவிக்கு அமெரிக்க ஒப்புதல்: காஸாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 34,000-ஐ கடந்துள்ள நிலையில், தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அதே வேளையில், இஸ்ரேலுக்கு தொடா்ந்து ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2,600 கோடி டாலா் நிதி உதவிக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதில் காஸாவில் மனிதாபிமான உதவிகளுக்கான 900 கோடி டாலா் நிதியும் அடங்கும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com