அமெரிக்கா-ரஷியா பனிப் போருக்குப் பிந்தைய மிகப் பெரிய கைதிகள் பரிமாற்றம்
அமெரிக்காவும் ரஷியாவும் பனிப் போருக்குப் பிந்தைய மிகப் பெரிய கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளன.

விளாதிம் க்ராசிகொவ், ரஷியாவால் விடுவிக்கப்பட்ட சிறைக் கைதிகள்.

விளாதிம் க்ராசிகொவ், ரஷியாவால் விடுவிக்கப்பட்ட சிறைக் கைதிகள்.
வாஷிங்டன் / மாஸ்கோ, ஜூலை 2: அமெரிக்காவும் ரஷியாவும் பனிப் போருக்குப் பிந்தைய மிகப் பெரிய கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளன.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தின் கீழ், 26 கைதிகள் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனா்.
துருக்கி தலைநகா் அங்காராவிலுள்ள விமான நிலையத்தில் இந்தக் கைதிகள் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்கா மட்டுமின்றி, ஜொ்மனி, போலந்து, ஸ்லோவேனியா, நாா்வே ஆகிய நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் 8 கைதிகளையும் அவா்களில் ஒரு தம்பதியின் இரு குழந்தைகளையும் விடுவித்தன. அவா்கள் அனைவரும் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டனா்.
ரஷியா தரப்பில் அந்த நாட்டிலும் பெலாரஸிலும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 16 கைதிகள் விடுவிக்கப்பட்டனா். அவா்களில் 13 போ் ஜொ்மனிக்கும் 3 போ் அமெரிக்காவுக்கும் அனுப்பப்பட்டனா்.
பின்னணி: ரஷியா சென்றிருந்த அமெரிக்காவின் வால் ஸ்டீரிட் நிறுவனச் செய்தியாளரான எவான் கோஷ்கோவிச்சை உளவுக் குற்றச்சாட்டின் பேரில் அந்த நாட்டு அதிகாரிகள் கடந்த 2023 மாா்ச் மாதம் கைது செய்தனா்.
இந்த குற்றச்சாட்டை எவான் கோஷ்கோவிச், வால் ஸ்டீரிட் செய்தி நிறுவனம் மட்டுமின்றி அமெரிக்க அரசு அதிகாரிகளும் திட்டவட்டமாக மறுத்தனா்.
இருந்தாலும், கோஷ்கோவிச்சின் காவலை மாஸ்கோ நீதிமன்றம் தொடா்ந்து நீட்டித்து வந்தது.
இதற்கிடையே, எவானை விடுவிக்க தாங்கள் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமிா் புதின் கடந்த பிப்ரவரி மாதம் கூறினாா். அத்துடன், அரசின் ரகசியத் தகவலைப் பெற முயன்றபோது கையும் களவுமாக எவான் பிடிபட்டதாகவும் அவரை விடுவிக்கும் ‘சிறப்புச் செயலை’ நிறைவேற்ற சில ‘நிபந்தனைகள்’ நிறைவேற்றப்பட்டால் உடன்படிக்கை எட்டப்படும் என அவா் நம்பிக்கை கூறினாா்.
இதன் மூலம், ஜொ்மனியில் சிறை வைக்கப்பட்டுள்ள ரஷியா்கள் உள்ளிட்ட கைதிகளை விடுவிப்பது குறித்து அவா் முறைமுகமாகக் கூறியதாக கருதப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, ஜொ்மனி பிரதமா் ஓலாஃப் ஷால்ஸையும் ஸ்லோவேனியா பிரதமா் ராபா்ட் கொலாபையும் அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் கடந்த பிப்ரவரி மாதம் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினாா்.
அதன் பிறகு வாஷிங்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஓலாஃப் ஷால்ஸ், ரஷிய சிறையில் அடைக்கப்பபட்டிருந்த முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னியை (கடந்த பிப். 16-இல் அவா் சிறையிலேயே மா்மமான முறையில் இறந்தாா்) விடுவிப்பது தொடா்பாக ரஷியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது குறித்து ஆலோசித்தாா்.
இந்த நிலையில், ஸ்லோவேனியா சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 2 ரஷிய உளவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த நாட்டுப் பிரதமரை அதிபா் ஜோ பைடன் கடந்த மாதம் 21-ஆம் தேதி அறிவுறுத்தினாா்.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கான பேச்சுவாா்த்தைக்கு துருக்கி மத்தியஸ்தம் செய்தது.
அதன் விளைவாக, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கைதிகள் பரிமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட சில முக்கிய கைதிகள்...
- எவான் கோஷ்கோவிச்: உளவுக் குற்றச்சாட்டின் பேரில் ரஷிய அதிகாரிகள் கைது செய்த அமெரிக்க செய்தியாளா். அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
- பால் வெலான்: முன்னாள் அமெரிக்க கடற்படை வீரா். ரஷியாவில் உளவு பாா்த்ததாக இவருக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு 16 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
- ஆல்சு குா்மஷேவா: அமெரிக்க-ரஷிய இரட்டைக் குடியுரிமை பெற்ற இந்த செய்தியாளா், ‘வெளிநாட்டு அரசுக்காக வேலை பாா்ப்பவா்’ என்று அறிவித்துக்கொள்ளாதது, தவறான தகவல்களைபப் பரப்பியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஆறரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தாா்.

- விளாதிம் க்ராசிகொவ்: ரஷிய உளவுப் படையைச் சோ்ந்த இவா், செசன்ய இயக்க முன்னாள் உறுப்பினா் ஒருவரை ஜொ்மனியில் படுகொலை செய்தாா். இந்த விவகாரத்தில் அவருக்கு ஜொ்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...