கூகுள் நிறுவனம் மறைமுகமாக மொபைல் போன்களில் ஆதிக்கம் செய்வதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் நம்பிக்கையற்ற சட்டங்களை மீறியுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையில் ``மொபைல் போன்களில் இணையத்தில் ஏதேனும் தேட முயலும்போது, தன்னிச்சையாகவே கூகுள் தளத்தில் நுழைவதற்காக கூகுள் நிறுவனம் பல கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
ஆன்லைன் தேடல் சந்தையில் 90 சதவிகிதத்தையும், ஸ்மார்ட்போன் தேடல் சந்தையில் 95 சதவிகிதத்தையும் கூகுள் கட்டுப்படுத்துகிறது. இதன்மூலம், சட்டவிரோதமாக மறைமுகமான ஆதிக்கத்தை உருவாக்கவும், உலகளவில் இயல்புநிலை தேடுபொறியாக மாறவும் பில்லியன் கணக்கான டாலர்களைப் பயன்படுத்தி, கூகுள் நம்பிக்கையற்ற சட்டங்களை மீறியுள்ளது” என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கானது, நீண்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் மேல்முறையீடுகளை உள்ளடக்கியது என்பதால், இந்த வழக்கு 2026ஆம் ஆண்டு வரையில் நீடிக்க வாய்ப்புள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமெரிக்க அரசின் தலைமை வழக்குரைஞர் மெரிக் கார்லண்ட் பாராட்டு தெரிவித்ததுடன், ``எந்தவொரு நிறுவனமும் சட்டத்திற்கு மேலானது அல்ல’’ என்று கருத்து தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும் இந்த தீர்ப்பை வரவேற்பதாகக் கூறி, கருத்து தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பினால், பங்குச்சந்தையில் ஆல்பபெட்டின் பங்குகள் 4.5 சதவிகிதம் சரிந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.