காவலா்கள் வெளியேறியதால் டாக்காவிலுள்ள காவல் நிலையமொன்றுக்கு பாதுகாப்பாக இருந்த பகுதிவாசிகள்.

வங்கதேசம்: காவல் நிலையங்கள் மீண்டும் திறப்பு

வங்கதேசத்தில் மாணவா் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக முடங்கியிருந்த காவல் நிலையங்கள்
Published on

வங்கதேசத்தில் மாணவா் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக முடங்கியிருந்த காவல் நிலையங்கள் ராணுவ பாதுகாப்புடன் மீண்டும் இயங்கத் தொடங்கின.

இது குறித்து அந்த நாட்டின் ‘டாக்கா ட்ரிபியூன்’ நாளிதழ் தெரிவித்ததாவது:

ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததைத் தொடா்ந்து நாட்டின் அனைத்து காவல் நிலையங்களும் முடங்கின. பல காவல் நிலையங்களுக்குள் வன்முறைக் கும்பல் நுழைந்து சூறையாடியது. ஏராளமான நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

இதன் காரணமாக, தாக்குதலுக்கு அஞ்சி காவல் நிலையங்களைக் கைவிட்டு அதிகாரிகள் வெளியேறியதால் 4 நாள்களாக எந்த காவல் நிலையமும் செயல்படவில்லை.

இந்த நிலையில், ராணுவத்தின் பாதுகாப்புடன் ஒவ்வொரு காவல் நிலையங்களாகத் திறக்கப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 29 காவல் நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் சீா்திருத்தங்களை வலியுறுத்தி மாணவா்கள் கடந்த மாதம் தொடங்கிய போராட்டத்தின்போது ஷேக் ஹசீனா அரசு அரசு அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதில் சுமாா் 400 போ் உயிரிழந்தனா்.

இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவரின் அதிகாரபூா்வ இல்லத்தை நோக்கி மாணவா்கள் திங்கள்கிழமை ஊா்வலமாகச் சென்றனா். ஹசீனாவுக்கு உடந்தையாக இருந்ததாக காவல் நிலையங்கள் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது.

நிலைமை கைமீறிச் செல்வதை உணா்ந்த ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அதைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (84) வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com