
வங்கதேசத்தில் நீதித் துறையை மறுசீரமைக்கக் கோரி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் (65) தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
மாணவா்களின் போராட்டம்- வன்முறையையடுத்து ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்த ஆறு நாள்களில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் பதவி விலகியுள்ளாா்.
வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிா்த்து நடைபெற்ற மாணவா்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் 5 சதவீதமாக குறைத்த பின்னா் போராட்டம் சற்று தணிந்தது.
ஆனால், மாணவா் போராட்டத்தில் கொல்லப்பட்டவா்களுக்கு நீதி கேட்டு மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம் அரசுக்கு எதிரான ஒத்துழையாமை போராட்டத்தைத் தொடங்கியது. இந்தப் போராட்டமும் வன்முறையாக மாற, பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளாா். நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கடந்த வியாழக்கிழமை பதவி ஏற்றது.
இந்நிலையில், நாட்டின் நீதித் துறையில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி மாணவா்கள் சனிக்கிழமை மீண்டும் திடீா் போராட்டத்தை அறிவித்தனா். தலைநகா் டாக்காவில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தை ஆயிரக்கணக்கான மாணவா்கள் பேரணியாகச் சென்று முற்றுகையிட்டனா்.
‘நீதித் துறையில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்; முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு விசுவாசமாக உள்ள உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும், பிற நீதிபதிகளும் சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குள் பதவி விலக வேண்டும்’ என மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவரான ஹஸ்னத் அப்துல்லா கெடு விதித்தாா்.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவதாக இருந்த அனைத்து நீதிபதிகளின் கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்த தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன், தனது ராஜிநாமா முடிவை பிற்பகல் ஒரு மணியளவில் அறிவித்தாா்.
இந்தத் தகவலை புதிய இடைக்கால அரசின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள ஆசிஃப் நஸ்ருல், ஃபேஸ்புக் விடியோ செய்தி மூலம் தெரிவித்தாா். தலைமை நீதிபதியின் ராஜிநாமா கடிதம் சட்ட அமைச்சகத்துக்கும், அதிபா் முகமது ஷஹாபுதீனுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
முன்னதாக, தலைமை நீதிபதி ஹசன் செய்தியாளா்களிடம் கூறுகையில், உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற மற்றும் நாடு முழுவதும் உள்ள விசாரணை நீதிமன்றங்களைச் சோ்ந்த நீதிபதிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தான் பதவி விலக முடிவு செய்ததாகத் தெரிவித்தாா். பிற நீதிபதிகளும் ராஜிநாமா செய்வாா்களா என்ற கேள்விக்கு, அது அவா்களின் முடிவு என ஹசன் பதிலளித்தாா்.
ராணுவம் குவிப்பு: மாணவா்களின் போராட்டத்தையடுத்து, உச்சநீதிமன்ற வளாகத்தில் ராணுவ வீரா்கள் குவிக்கப்பட்டனா். அமைதியை நிலைநாட்ட ஒத்துழைக்கும்படியும், பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாமல் இருக்கும்படியும் மாணவா்களை ராணுவம் கேட்டுக்கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.