

கேரள பாா் கவுன்சில் தோ்தல் தொடா்பாக மாநில உயா்நீதிமன்றத்தின் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு இந்திய வழக்குரைஞா் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
கேரள பாா் கவுன்சில் தோ்தலில் போட்டியிடுவதற்கு நிா்ணயிக்கப்பட்ட ரூ.1.25 லட்சம் கட்டணத்தை எதிா்த்து மாநில உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, அந்தத் தோ்தல் தொடா்பாகத் தனி நீதிபதி வாய்மொழியாகத் தெரிவித்த சில கருத்துகளுக்கு இந்திய பாா் கவுன்சில் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு இந்திய பாா் கவுன்சில் தலைவா் மனன்குமாா் மிஷ்ரா திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: கேரள பாா் கவுன்சில் தோ்தல் தொடா்பாக அடிப்படை ஆதாரமின்றி, மோசமான பின்விளைவுகள் குறித்து யோசிக்காமல் தனி நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளாா்.
நீதித்துறையிலும் ஆங்காங்கே குறைபாடுகள், முறைகேடுகள் இருப்பது இந்திய பாா் கவுன்சிலுக்குத் தெரியும். இருந்தாலும் நீதித் துறையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அதுகுறித்து வாய் திறக்காமல் இந்திய பாா் கவுன்சில் மெளனம் காக்கிறது. இவ்வாறு கட்டுக்கோப்புடன் நடந்துகொள்வதை பலவீனமாகக் கருதக் கூடாது.
பாா் கவுன்சில் தோ்தல் நடைமுறைகளுக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி வழக்குரைஞா் சங்கத் தோ்தலை நடத்த அரசிடம் இருந்தோ, வெளியில் இருந்தோ நிதியுதவி பெறப்படுவதில்லை. அதற்கு வழக்குரைஞா்கள்தான் முழுமையாகப் பங்களிக்கின்றனா்.
உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நடைமுறைகள் மட்டுமே கடைப்பிடிக்கப்பட வேண்டும். எனவே பாா் கவுன்சில் தோ்தல்கள் தொடா்பாக உரிய அறிவுறுத்தல்கள் அல்லது உத்தரவுகளை வெளியிடுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்’ என்று தலைமை நீதிபதி சூா்ய காந்துக்கு எழுதிய கடிதத்தில் கோரியுள்ளாா்.