கொலை வழக்கில் வங்கதேசத்தின் முன்னாள் சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆலோசகர் சல்மான் ரஹ்மானை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் வங்கதேசத்தைவிட்டு கடல்வழியாக தப்ப முயன்ற நிலையில், டாக்கா அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர் போராட்டத்தின்போது, டாக்காவின் முகமதுபூர் பகுதியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஜூலை 19ஆம் தேதி மளிகைக் கடைக்காரர் அபு சயீது என்பவர் உயிரழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது உறவினர் அளித்த புகாரை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் பாதுகாப்புத்துறை மற்றும் உள்துறை அமைச்சர்கள் உள்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், டாக்கா கல்லூரி வெளியே ஜூலை 16ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்த வழக்கில், சல்மானுக்கும், அனிசுலுக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேச தொழிலதிபரான சல்மான், கடந்த பொதுத் தேர்தலின்போது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்னதாக ஹசீனாவின் ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
அதேபோல், கடந்த 2014 முதல் வங்கதேசத்தின் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த அனிசுல், அரசு கலைக்கப்படும் வரை அப்பதவியில் தொடர்ந்தார்.
குறிப்பாக, ஷேக் ஹசீனா மீதான கொலை வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த சில மணிநேரங்களில் சல்மானும் அனிசுலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் வெடித்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிய ஹசீனாவின் விசாவை பிரிட்டனும், அமெரிக்காவும் நிராகரித்துள்ளது.
இதனிடையே, ஷேக் ஹசீனாவின் அமைச்சரவையில் இருந்தவர்களும், கட்சியின் முக்கிய தலைவர்களும் இன்னும் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.