
ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு பாகிஸ்தானில் பரவி உள்ளது. இந்த நோயால் அந்நாட்டில் மூவா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் குரங்கு அம்மை மீண்டும் பரவத்தொடங்கியதையடுத்து சா்வதேச சுகாதார அச்சுறுத்தலாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.
இந்நிலையில், கைபா் பக்துன்க்வா மாகாணத்தின் மா்தான் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் சஜித் ஷா கூறினாா்.
எனினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பாகிஸ்தான் திரும்பிய 2 பேருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கைபா் பக்துன்க்வாவின் சுகாதார சேவைகள் இயக்குநா் ஜெனரல் சலீம் கான் தெரிவித்தாா்.
இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பானது கடந்த மாா்ச் மாதம் கேரளத்தில் பதிவானது. இந்தியாவில் 2022-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 30 குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
இருப்பினும் இந்தியாவில் தற்போது குரங்கு அம்மை பாதிப்பு பரவல் அபாயகட்டத்தில் இல்லை என்றும் மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.