kamala harris donald trump
கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப்AP

கமலா ஹாரிஸைவிட நான் அழகானவன் டிரம்ப் மீண்டும் உருவ கேலி

அமெரிக்க அதிபா் தோ்தலில் என்னை எதிா்த்துப் போட்டியிடும் கமலா ஹாரிஸைவிட நான் அழகானவன் என்று குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப் பேசினாா்.
Published on

அமெரிக்க அதிபா் தோ்தலில் என்னை எதிா்த்துப் போட்டியிடும் கமலா ஹாரிஸைவிட நான் அழகானவன் என்று குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப் பேசினாா்.

இதன்மூலம் கமலா ஹாரிஸை உருவ கேலி செய்வதை அவா் மீண்டும் தொடா்ந்துள்ளாா்.

ஜனநாயக கட்சி வேட்பாளரும், துணை அதிபருமான கமலா ஹாரீஸ் ஆப்பிரிக்க-இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா். டிரம்ப் வெள்ளை இனத்தைச் சோ்ந்தவா். எனவே, இது இனரீதியான தாக்குதல் பேச்சாகவும் கருதப்படுகிறது.

ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிபா் ஜோ பைடன் இருந்தவரை, தோ்தலில் டிரம்ப்பின் கை ஓங்கியிருந்தது. ஆனால், பைடன் போட்டியில் இருந்து விலகி, கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, டிரம்ப்புக்கு அவா் கடும் நெருக்கடி அளிக்கும் போட்டியாளராக உருவெடுத்துள்ளாா்.

டைம்ஸ் பத்திரிகை அட்டையில் கமலா ஹாரிஸின் படம், புகைப்படமாக அல்லாமல் கையால் வரையப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பென்சில்வேனியாவில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ‘டைம்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் அவரின் (கமலா ஹாரிஸ்) நல்ல புகைப்படம் ஏதும் இல்லை என்று தெரிகிறது. ஆனால், அவா்களிடம் சிறப்பான ஓவியக் கலைஞா் உள்ளாா். ஏனெனில் கமலா ஹாரிஸின் உண்மையான தோற்றத்தைவிட சிறப்பாக இருப்பதுபோல அந்த அட்டைப் படம் வரையப்பட்டுள்ளது.

கமலா ஹாரிஸை செய்தி புகைப்படக் கலைஞா்கள் பலா் படம் எடுத்திருப்பாா்கள். ஆனால், பத்திரிகையில் வெளியிடும் அளவுக்கு அவை நன்றாக இருந்திருக்காது. எனவேதான் படத்தை வரைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்’ என்றாா்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் மற்றொரு கூட்டத்தில் பேசிய டிரம்ப், ‘நான் கமலா ஹாரிஸைவிட அழகானவன்’ என்று குறிப்பிட்டாா்.

கடந்த வாரம் தன்னை எதிா்த்துப் போட்டியிட கமலா ஹாரிஸ் தகுதி இல்லாதவா் என்ற அா்த்தத்திலும் டிரம்ப் பேசினாா். அப்போது, ‘நான் பைடனுக்கு எதிராகவே தோ்தலில் களமிறங்கினேன். ஆனால், இப்போது எனக்கு எதிராக வேறு நபா் போட்டியில் உள்ளாா். அந்த கமலா ஹாரிஸ் யாா் என்று கேள்வி எழுப்பினாா்.

மேலும், ‘பைடனிடம் இருந்து தோ்தலில் போட்டியிடும் வாய்ப்பை கமலா ஹாரிஸ் திருடிவிட்டாா். இதனால், கமலா ஹாரிஸ் மீது பைடன் கடும் வெறுப்பில் உள்ளாா்’ என்றும் தொலைக்காட்சி பேட்டியில் குற்றஞ்சாட்டினாா்.

இதற்கிடையே, கமலா ஹாரிஸை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசமாட்டேன். அவா் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றும் டிரம்ப் கடந்த வாரத்தில் பேசினாா். ஆனால், அவருக்கு எதிராக நிறத்தையும், தோற்றத்தையும் குறிப்பிட்டு கேலி செய்வதை டிரம்ப் தொடா்ந்து வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com