
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் சத்தமாக பேசுவதற்கும் பாடுவதற்கும் தடை விதித்து புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ல் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அங்கு பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்கள் கல்வி பயில, வேலைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. பெண்கள் மட்டுமன்றி சிறுமிகள் கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் வெளியில் செல்லும்போது முகம் உள்பட உடல் முழுவதும் மறைக்கக்கூடிய உடையை அணிய வேண்டும், ஆண்கள் துணையின்றி பெண்கள் வெளியில் செல்லக் கூடாது, விமானங்களில் பயணிக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் பெண்கள் சத்தமாக பேசக்கூடாது, பாடக் கூடாது என்று தலிபான்கள் அறிவித்து இதுகுறித்த சட்டத்தையும் இயற்றியுள்ளனர்.
நல்லொழுக்கத்தைப் பேண இந்த இஸ்லாமிய சட்டம் அமல்படுத்தப்படுவதாகவும் மீறினால் நடவடிக்கை எடுக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
அரசின் செய்தித் தொடர்பாளர் இத்தகவலை வெளியிட்டுள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலமாக பெண்கள் பொதுவெளியில் கலாசார மற்றும் சமூக நடவடிக்கைகளில் பங்களிப்பு குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக பெண்கள் தங்கள் புகைப்படங்களை வெளியில் அனுப்பக் கூடாது, இசை இசைக்கக் கூடாது, தனியாக பயணிக்கக் கூடாது, குடும்ப உறுப்பினர் தவிர வேறு யாருடனும் பயணிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தலிபான்களின் நடவடிக்கைகளுக்கு ஐ.நா. உள்ளிட்ட உலகில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.