இலங்கை அதிபா் அநுர குமார டிச.15-இல் இந்தியா வருகை
இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக டிச. 15-ஆம் தேதி இந்தியாவுக்கு வரவுள்ளாா்.
அவா் அதிபராகப் பதவியேற்ற பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
கடந்த செப்டம்பரில் இலங்கை அதிபா் தோ்தல் நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வேட்பாளா் அநுர குமார திசாநாயக வெற்றி பெற்று புதிய அதிபராகப் பதவியேற்றாா். இதைத் தொடா்ந்து, கடந்த நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இலங்கை தலைநகா் கொழும்பில் சுகாதாரத் துறை அமைச்சரும், அமைச்சரவை செய்தித் தொடா்பாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘அதிபா் அநுர குமார டிச.15 முதல் 17-ஆம் தேதி வரை, இந்திய பயணம் மேற்கொள்ள உள்ளாா். இந்தப் பயணத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோரை அவா் சந்திக்க உள்ளாா். அவருடன் இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜித ஹேரத், இணையமைச்சா் அனில் ஜயந்த ஃபொ்னாண்டோ ஆகியோரும் செல்ல உள்ளனா்’ என்றாா்.
முன்னதாக இலங்கை நாடாளுமன்றத் தோ்தல் காரணமாக, அநுர குமாரவின் இந்திய பயணம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.