பாக். : தேர்தல் பிரசாரங்களில் அதிகரிக்கும் வன்முறைச் சம்பவங்களால் பதற்றம்!

பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின்போது வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறுவது  அதிகரித்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.  
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் காவல்துறையினர்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் காவல்துறையினர்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அடுத்த மாதம் 8-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.  

பாகிஸ்தானில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று இம்ரான் கான் தலைமையில் ஆட்சியமைத்தது. இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு இம்ரான் கான் அரசுக்கு எதிராக  நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஷாபாஸ் ஷெரீப் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது. 

எதிர்வரும் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தானின் கராச்சி மாநகரில் தேர்தல் பிரசாரத்தின்போது வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறுவது  அதிகரித்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.  

பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கோட்டையாக கருதப்படும் சிந்து மற்றும் கராச்சியில், இம்முறை  இம்ரான் கானின் பிடிஐ கட்சி, பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் முத்தாஹிதா குவாமி இயக்கம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  இதன் காரணமாக ஆங்காங்கே தேர்தல் பிரசாரத்தின்போது மோதல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.மேலும் பல சுயேட்சைகளும் தேர்தலில் களம் காணுவதால் போட்டி கடுமையாகியுள்ளது.

நசிம்னாத் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது, இன்று(ஜன.29) முத்தாஹிதா குவாமி இயக்கம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில்,  முத்தாஹிதா குவாமி இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மூவர் காயமடைந்தனர்.

முன்னதாக கிளிப்டன் பகுதியில் நேற்று(ஜன.28) இம்ரான் கானின் பிடிஐ கட்சியினர்  உரிய அனுமதியின்றி நடத்திய பேரணியை   காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் லேசான தடியடி நடத்தியும் கலைத்தனர். காவல்துறையினர் மீது பிடிஐ கட்சித் தொண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது.  இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com