பிரதமர் மோடியிடம் மாலத்தீவு அதிபர் மன்னிப்பு கேட்க வேண்டும் : உள்நாட்டில் வலுக்கும் எதிர்ப்பு!

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், பிரதமர் மோடியிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென அந்நாட்டின் ஜம்ஹூரி கட்சித் தலைவர் காசுயிம் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் / இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப்படம்
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் / இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப்படம்

மாலே : இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் கடல்சாா் முக்கிய அண்டை நாடான மாலத்தீவில் அதிபா் தோ்தல் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. அத்தோ்தலில் இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த அதிபா் முகமது சோலியை தோற்கடித்து, மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ் கடந்த நவம்பரில் பதவியேற்றாா்.

சீன ஆதரவு நிலைப்பாடு உடையவராக அறியப்படும் இவா், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தினரை திரும்பப் பெற வேண்டும் என்று பதவியேற்றவுடன் வலியுறுத்தினாா். மேலும், இந்தியாவுடனான 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்றும் அறிவித்தாா்.

முகமது மூயிஸ் அதிபரான பிறகு இந்தியா - மாலத்தீவு இடையிலான உறவுகளில் சுமுகத்தன்மை இல்லாத நிலையில்,  மாலத்தீவைச் சார்ந்த அமைச்சர்கள் மூவர், பிரதமர் மோடிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்டதைத் தொடர்ந்து, இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை முன்வைத்து, மாலத்தீவு அமைச்சா்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவா்கள் சிலா் சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்துகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. இந்தியா மற்றும் பிரதமா் மோடியை அவமதிக்கும் வகையிலும், இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இக்கருத்துகள் இருந்தன. இதையடுத்து, இந்தியா்கள் பதிலடி விமா்சனங்களைப் பதிவிட்டதால் சமூக ஊடகங்களில் கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்தியா மற்றும் பிரதமா் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சா்கள் தெரிவித்த கருத்துகளுக்கு அந்நாட்டு எதிா்க்கட்சித் தலைவா்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், பிரதமர் மோடியிடம் மன்னிப்புக் கோர வேண்டுமென அந்நாட்டின் ஜம்ஹூரி கட்சித் தலைவர் காசுயிம் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்தியாவுக்கு எதிரான மறைமுகமான விமர்சனங்களுக்காகவும் அவர் மன்னிப்பு கோர வேண்டுமெனவும்,  இந்தியாவுடனான தூதரக உறவுகளில் நல்லிணக்கம் ஏற்படுத்திட மாலத்தீவு அதிபர் உரிய நடவடிக்கை எடுக்கவும் ஜம்ஹூரி கட்சித் தலைவர் காசுயிம் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com