இனி கூகுளால் உங்கள் குறுஞ்செய்திகளையும் படிக்க முடியும்!

கூகுளின் புதிய செய்யறிவு தொழில்நுட்பம் உள்ளடங்கிய குறுஞ்செய்தி செயலியில், நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதுவும் கண்காணிக்கப்படும்.
இனி கூகுளால் உங்கள் குறுஞ்செய்திகளையும் படிக்க முடியும்!

கூகுள் தனது குறுஞ்செய்தி செயலியான 'கூகுள் மெசேஜஸ்' (Google Messages)-ல் தற்போது தனது செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை (Bard) இணைக்கும் முயற்சியில் உள்ளது. அதன் பீட்டா (Beta) வடிவங்களை குறிப்பிட்ட பயனாளர்களுக்கு அனுமதித்து சோதனையும் செய்துவருகிறது. 

இந்நிலையில், அந்த புதிய செய்யறிவு அம்சம் கொண்ட குறுஞ்செய்தி செயலி உங்களது உரையாடல்களை கவனிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் யாருடன் என்ன பேசுகிறீர்கள்? எப்படி பேசுகிறீர்கள்? நீங்கள் பேசுபவருடனான உங்களது உறவு என்ன? நீங்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் என்னென்ன? எங்கு எப்படி பேசுவீர்கள்? அதாவது அலுவலகத்தில் இருந்தால் எப்படி பேசுகிறீர்கள், வீட்டிலிருந்தால் எப்படி பேசுவீர்கள் என்பதையும் கண்காணிக்கும் எனக் கூறப்படுகிறது. 

இந்த செயலியின் பீட்டா வடிவில், உள்ளே செல்லவும் கேட்கப்படும் அனுமதிகளும், அளிக்கப்படும் முன்னறிவிப்புக்களும், உங்கள் தனிப்பட்ட விபரங்களை நாங்கள் பார்ப்போம் என சுற்றி வளைத்துச் சொல்வதுபோல் உள்ளது. 

அதுமட்டுமன்றி கண்காணிக்கப்படும் எழுத்து வடிவிலான உரையாடல் விவரங்கள் மற்ற சேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயலியில் உள்ள செய்யறிவு, இந்த விவரங்களைக் கண்காணித்து, வரும் குறுஞ்செய்திகளுக்கு என்ன பதிலளிக்கலாம் எனப் பரிசீலிக்கும் எனக் கூறப்படுகிறது. 

சமீபத்தில் கூகுளின் இன்காங்கனீட்டோ (incognito mode) பக்கத்திலும், பயனாளர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்ததற்காக, கூகுளுக்கு 5 பில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இன்காங்கனிட்டோ பக்கத்தில் கண்காணிக்கப்படமாட்டோம் எனத் தவறான பிம்பத்தை மக்களிடையே உருவாக்கி ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com