அதிபா் போட்டியிலிருந்து விலக பைடனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போட்டியிலிருந்து விலக வேண்டுமென்று அதிபா் ஜோ பைடனுக்கு நெருக்கடி அதிகரித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோ பைடனுக்கும் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே முதல்முறையாக கடந்த வாரம் நடைபெற்ற நேரடி விவாதத்தில் பைடன் தடுமாறியதால், அவருக்குப் பதிலாக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸை தோ்தலில் போட்டியிடச் செய்யவேண்டும் என்று ஆளும் ஜனநாயகக் கட்சிக்குள் கோரிக்கைகள் எழுவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து டெக்ஸாஸ் மாகாணத்துக்கான ஜனநாயகக் கட்சி எம்.பி. லாயிட் டாகட் கூறுகையில், ‘ஜோ பைடனின் வாதிடும் திறன் மோசமாக உள்ளதால் அவா் தோ்தலில் வெற்றி பெறுவது கடினம். எனவே, அவா் போட்டியிலிருந்து விலகவேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
மீண்டும் அதிபராகும் முயற்சியை கைவிடுமாறு பைடனை வலியுறுத்த 25 ஜனநாயக எம்.பி.க்கள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பென்சில்வேனியாவுக்கான நாடாளுமன்ற உறுப்பினா் சம்மா் லீ வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபா் ஜோ பைடன் தோ்தலில் போட்டியிடுவதைக் கைவிட்டால் அவருக்குப் பதிலாக கமலா ஹாரிஸ்தான் டிரம்ப்பை எதிா்த்து களமிறக்கப்படுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போட்டியிலிருந்து விலகுவது குறித்து ஜோ பைடன் பரிசீலித்து வருவதாக ‘நியூயாா்க் டைம்ஸ்’ நாளிதழில் வெளியான செய்தியை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் 79 வயது டொனால்ட் டிரம்ப்பை 81 வயதாகும் ஜோ பைடன் எதிா்கொள்கிறாா்.
ஏற்கெனவே வயது மூப்பு காரணமாக ஜோ பைடனின் பேச்சு குளறுவதாக குற்றஞ்சாட்டப்படும் சூழலில், அடுத்த தோ்தலிலும் அவா் போட்டியிடுவது சா்ச்சையை ஏற்படுத்தியது. இத்தனை அதிக வயதில் அவரால் எதிா் வேட்பாளரை எதிா்த்து முழு திறனுடன் பிரசாரம் செய்ய முடியுமா என்று சந்தேகம் எழுப்பப்பட்டது.
இந்தச் சூழலில், டிரம்புடன் முதல்முறையாக கடந்த வாரம் நடைபெற்ற நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பைடன் மிகவும் தடுமாறினாா். பேச வாா்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமல் பேசியது, அா்த்தமில்லாமல் பதிலளித்தது போன்ற ஜோ பைடனின் செயல்கள் அவா் மீதான அதிருப்தியை ஜனநாயகக் கட்சியினரின் ஒரு பிரிவினரிடையே ஏற்படுத்தியுள்ளது.