மியான்மரில் பணவீக்கம் அதிகரித்திருக்கும் நிலையில், கடை ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்திக் கொடுத்த உரிமையாளர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது கடை ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்த கடை உரிமையாளரான பியே பியோ ஸா என்பவரின் மூன்று செல்போன் கடைகளை மூடிய ராணுவத்தினர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவர் மட்டுமின்றி இதே குற்றச்சாட்டில் மேலும் 10 கடை உரிமையாளர்களை சிறையில் அடைத்துள்ளனர். ஒழுங்கற்ற சட்டத்தின் மூலம் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பணவீக்கம் ஏற்பட்டிருக்கையில் ஊதிய உயர்வு வழங்குவது அமைதியைக் கெடுக்கும் என்று மியான்மர் ராணுவ அரசு தெரிவித்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட உரிமையாளரின் கடை வாசலில் ‘நாட்டின் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை சீர்குலைத்ததற்காக மூடப்பட்டது’ என்று எழுதி ஒட்டியுள்ளனர்.
”சம்பளத்தை உயர்த்தியதால் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால், இப்போது கடையும் இல்லை, வேலையும் இல்லை. எங்களைப் போன்ற அடித்தட்டு மக்கள் விலைவாசி உயர்வால் மிகவும் விரக்தியில் உள்ளோம்” என்று அந்தக் கடையின் ஊழியர் தெரிவித்தார்.
”பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்களை நம்பவைத்து ஆட்சியைக் குறித்தத் தவறான மதிப்பீடுகளை வழங்கி வணிகர்களிடம் பண வசூல் செய்து வருகின்றனர்” என்று சட்டத்துறை வல்லுநர் ஒருவர் கூறினார்.
மியான்மரில் கடந்த 2021-ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசினை பதவியிலிருந்து நீக்கி ராணுவம் ஆட்சி அமைத்தது. அப்போதிருந்து பணவீக்கத்தைத் குறைக்கவும், மக்கள் கிளர்ச்சியை ஒடுக்கவும் அரசு முயற்சித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.