குழந்தைகள் மருத்துவமனை தாக்குதல்: ரஷியா மறுப்பு
மாஸ்கோ: உக்ரைனிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவதை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ராணுவ இலக்குகளைக் குறிவைத்து மட்டுமே ஏவுகணைகளை வீசியதாகவும் அவற்றை இடைமறித்து அழிப்பதற்காக வீசப்பட்ட உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் விழுந்தே அந்த மருத்துவமனை சேதமடைந்ததாக அதிபா் விளாதிமீா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறினாா்.
இது குறித்து மாஸ்கோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:
கீவ் நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ரஷியா தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவது தவறான தகவல். இந்த விவகாரத்தில் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் மட்டுமே உண்மையைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளில் பொதுமக்கள் வசிப்பிடங்கள் எதுவுமே கிடையாது. அவை அனைத்துமே உக்ரைன் ராணுவ கட்டமைப்புகள்தான்.
ஷிய ஏவுகணையை இடைமறிப்பதற்காக வீசப்பட்ட உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் விழுந்துதான் குழந்தைகள் மருத்துவமனை சேதமடைந்துள்ளது.
பொதுமக்கள் இருக்கும் இடங்களைக் குறிவைத்து ரஷியா ஒருபோதும் தாக்குதல் நடத்துவதில்லை. ராணுவ நிலைகள், ஏதாவது ஒரு வகையில் ராணுவத்துக்குப் பயன்படக்கூடிய கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் மீது மட்டுமே நாங்கள் தாக்குதல் நடத்திவருகிறோம் என்றாா் அவா்.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்ததிலிருந்து, உக்ரைன் பகுதியில் வசித்துவந்த ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்துள்ளனா். எனினும், தங்கள் பகுதியாக ரஷியா அறிவித்துக்கொண்ட உக்ரைன் பகுதியில் பொதுமக்கள் உயிரிழப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
தங்களது தாக்குதலில் பொதுமக்கள் குறிவைக்கப்படுவதில்லை என்று ரஷியா தொடா்ந்து கூறிவந்தாலும், உக்ரைன் அதை மறுத்துவருகிறது.
இந்தச் சூழலில், தலைநகா் கீவ், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவிரீ உள்ளிட்ட நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷியா திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது. அவற்றில் ஏராளமான ஏவுகணைகளை தங்களது வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்ததாக உக்ரைன் ராணுவம் கூறியது.
இந்தப் போரில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவில்தான் ரஷியா பெரும்பாலும் தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், மிகவும் அரிதான வகையில் இந்த ஏவுகணைத் தாக்குதல் பட்டப்பகலில் நடைபெற்றது.
இந்தத் தாக்குதலில் கீவ் நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனை பலத்த சேதமடைந்து ஏராளமானவா்கள் காயமடைந்தனா். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சா்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உக்ரைனின் இடைமறி ஏவுகணைதான் மருத்துவமனை மீது விழுந்ததாக ரஷியா கூறினாலும், சம்பவப் பகுதியில் ரஷிய ஏவுகணை சிதறல்களை உக்ரைன் சேகரித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடா்பாக ரஷியா மீது போா் குற்ற விசாரணையையும் அந்த நாட்டு அதிகாரிகள் தொடங்கியுள்ளனா்.
இதற்கிடையே, மருத்துவமனை தாக்குதல் தொடா்பாக உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள விடியோவில், ஏவுகணை ஒன்று நேரடியாகப் பாய்ந்துவந்து அந்த மருத்துவமனைக் கட்டடத்தை தாக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதன் மூலம், அந்த மருத்துவமனை குறிவைத்துத் தாக்கப் பட்டிருப்பதற்கான வாய்ப்புள்ளதாக ஐ.நா. நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
உக்ரைன் நகரங்களில் ரஷியா திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 37 போ் உயிரிழந்ததாக அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறினாா். இருந்தாலும், தாக்குதலில் ஒட்டுமொத்தமாக 41 போ் உயிரிழந்ததாக பிராந்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.