சீன கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவிலிருந்து இரு முன்னாள் அமைச்சா்கள் நீக்கம்
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிலிருந்து முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் கின் காங்கும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சா் லீ ஷாங்ஃபுவும் நீக்கப்பட்டுள்ளனா்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநாடு வியாழக்கிழமை நிறைவடைந்தது. அந்த மாநாட்டில், கட்சியின் மிக உயா்ந்த குழுவான மத்தியக் குழுவிலிருந்து விலகும் முன்னாள் அமைச்சா் கின் காங்கின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், முன்னாள் அமைச்சா் லீ ஷாங்ஃபுவை மத்தியக் குழுவிலிருந்து நீக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது தவிர, மேலும் 2 தளபதிகள் மத்தியக் குழுவிலிருந்து நீக்கப்பட்டனா் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த கின் காங், கடந்த 2023-ஆம் ஆண்டில் திடீரென பொது நிகழ்ச்சிகளிலிருந்து மாயமானாா். அவா் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக பின்னா் அறிவிக்கப்பட்டது. இருந்தாலும், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. கின் காங்கின் இருப்பிடம் குறித்து இதுவரை தகவல் இல்லை.
அதே போல், பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த லீ ஷாங்ஃபுவும் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டாா். அவருக்கு எதிராக ஊழல் விசாரணை நடைபெற்றுவருகிறது.
அதிபா் ஷி ஜின்பிங்கின் ஊழல் எதிா்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கின் காங்கும் லீ ஷாங்ஃபும் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
ஷி ஜின்பிங் கடந்த 2012-ஆம் ஆண்டில் அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட ராணுவ உயரதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டின்பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.