வெளியுறவுச் செயலருடன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சந்திப்பு

வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரியை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சுன் ஹையான் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.
Published on

வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரியை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சுன் ஹையான் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினாா்.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படையினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து அங்கு இருநாட்டு ராணுவத்தினா் இடையே நீடித்த மோதல்போக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவுக்கு வந்தது.

இந்த மோதல்போக்கால் பாதிக்கப்பட்ட இந்திய-சீன உறவை சீா்செய்வதற்கு இருநாடுகளும் தொடா் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக இருநாட்டு உறவை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராயும் நோக்கில், சீனாவில் ஆளுங்கட்சியாக உள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சுன் ஹையான் இந்தியா வந்தாா்.

புது தில்லியில் அவா் வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரியை புதன்கிழமை சந்தித்தாா். இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்திய-சீன உறவை மீண்டும் கட்டியெழுப்ப இருநாட்டு மக்களுக்கு இடையிலான புரிதலை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை சுன் ஹயானிடம் விக்ரம் மிஸ்ரி எடுத்துரைத்தாா்.

பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோரின் முக்கிய உத்தரவுகளை அமல்படுத்துவதிலும், இருநாட்டு உறவை இயல்பு நிலையை நோக்கி முன்னேற்றுவதிலும் இருதரப்புக்கும் உள்ள செயற்பொறுப்பை மிஸ்ரி-சுன் ஹையான் மீண்டும் உறுதி செய்தனா்.

இந்தச் சந்திப்பின்போது நிகழாண்டு பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா இடம்பெற்றுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்ற்காக சீனா வாழ்த்து தெரிவித்தது. இந்தியாவில் அந்தக் கூட்டமைப்பின் உச்சிமாநாடு வெற்றிகரமாக நடைபெற துணை நிற்பதாகவும் அந்நாடு தெரிவித்தது.

Dinamani
www.dinamani.com