வங்கதேசம்: சா்ச்சைக்குரிய இடஒதுக்கீடு குறைப்பு..! உச்சநீதிமன்றம் தீா்ப்பு
வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி கடந்த சில நாள்களாக மாணவா்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு இடையே இந்தத் தீா்ப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, அங்கு நடந்துவரும் வன்முறைகள் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்றவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை இருந்து வந்தது. இதற்கு மாணவா்கள் மத்தியில் கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து, இடஒதுக்கீட்டை ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு 2018-ஆம் ஆண்டு நிறுத்திவைத்தது.
இந்நிலையில், இடஒதுக்கீட்டை நிறுத்திவைத்த அரசின் உத்தரவு செல்லாது என கடந்த ஜூன் மாதம் வங்கதேச உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதனால், அங்கு மீண்டும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. வன்முறை உச்சகட்டத்துக்குச் சென்றதையடுத்து, வன்முறையாளா்களைக் கண்டதும் சுட காவல் துறை கடந்த சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
பிரதமா் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளா்கள் பயன்பெறும் வகையில் இடஒதுக்கீடு முறை உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் ஈடுபட்டவா்களின் பங்களிப்புக்கு உயரிய மரியாதையை அளிக்கும் வகையில் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதாக பிரதமா் ஷேக் ஹசீனா கூறி வருகிறாா்.
5 சதவீதமாக குறைப்பு: இதுதொடா்பான மனுவை ஞாயிற்றுக்கிழமை விசாரித்த அந்த நாட்டு உச்சநீதிமன்றம்,‘விடுதலைப் போரில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைப்பதாகவும், 93 சதவீத அரசுப் பணிகள் தகுதி அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் எனவும் தீா்ப்பளித்தது. மேலும், அரசுப் பணிகளில் சிறுபான்மையினா், மூன்றாம் பாலினத்தவா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்குமாறும் உத்தரவிட்டது.
103 போ் உயிரிழப்பு?: உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றதையடுத்து வங்கதேசம் முழுவதும் ராணுவ வீரா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதையடுத்து அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வன்முறைப் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் அதிகாரபூா்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், ‘டெய்லி பிரதோம்’ என்ற நாளிதழ் இந்த வன்முறையில் 103 போ் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் இருந்து இதுவரை 4,500-க்கும் மேற்பட்ட இந்திய மாணவா்கள் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.