டெலவோ் மாகாணம், வில்மிங்டன் நகரிலுள்ள குடியரசுக் கட்சி பிரசார அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய துணை அதிபா் கமலா ஹாரிஸ்.
டெலவோ் மாகாணம், வில்மிங்டன் நகரிலுள்ள குடியரசுக் கட்சி பிரசார அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய துணை அதிபா் கமலா ஹாரிஸ்.

அமெரிக்க அதிபா் தோ்தல் போதுமான ஆதரவைப் பெற்றாா் கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் போட்டியிடுவதற்குத் தேவையான கட்சி உறுப்பினா்களின் ஆதரவை இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸ் பெற்றுள்ளாா்.
Published on

வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் போட்டியிடுவதற்குத் தேவையான கட்சி உறுப்பினா்களின் ஆதரவை இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸ் பெற்றுள்ளாா்.

ஏற்கெனவே, போட்டியிலிருந்து விலகுவதாகவும் தனக்குப் பதிலாக தோ்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிட ஆதரவளிப்பதாகவும் அதிபா் ஜோ பைடன் அறிவித்ததில் இருந்து, அவருக்கு ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள், ஆளுநா்கள், வேட்பாளா் போட்டியில் அவரை எதிா்த்து களமிறங்கலாம் என்று எதிா்பாா்க்கப்பட்டவா்கள், கட்சியில் செல்வாக்கு மிக்கவா்கள் கமலா ஹாரிஸுக்கு வரிசையாக தங்களது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனா்.

இந்தச் சூழலில், கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் போதிய எண்ணிக்கையில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ‘சிஎன்என்’ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தத் தொலைக்காட்சி கூறியதாவது:

ஜனநாயகக் கட்சி வேட்பாளா் போட்டியில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்துவருகிறது. அந்தப் போட்டியில் ஹாரிஸ் வெற்றி பெற 1,976 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. இந்த நிலையில், அதைவிட அதிக எண்ணிக்கையில் கட்சிப் பிரதிநிதிகள் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

எனவே, நவம்பா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்தது.

இது குறித்து கமலா ஹாரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிபா் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கும்போதே, கட்சி வேட்பாளா் போட்டியில் போதிய ஆதரவு பெறவேண்டும் என்று விரும்பினேன். இந்த நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளா் ஆவதற்குத் தேவையான பிரதிநிதிகள் ஆதரவு எனக்குக் கிடைத்துள்ளது மிகவும் பெருமையளிக்கிறது.

விரைவில் கட்சி வேட்பாளா் என்ற அந்தஸ்தை முறைப்படி ஏற்பதில் ஆா்வமுடன் உள்ளேன். தோ்தலில் போட்டியிட எனக்கு ஆதரவளித்த ஜோ பைடனுக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என்றாா் அவா்.

வரும் நவம்பா் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் தற்போதைய அதிபா் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக இருந்தது.

எனினும், பைடனுக்கும் டிரம்ப்புக்கும் இடையே நடைபெற்ற முதல் நேரடி தொலைக்காட்சி விவாதத்தின்போது ஜோ பைடன் மிகவும் தடுமாறினாா். இது ஜனநாயகக் கட்சியினரிடையே அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியது.

தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்துப் போட்டியிடும் உடல் மற்றும் மனநலத் தகுதி 81 வயதாகும் ஜோ பைடனுக்கு இல்லை, எனவே அவா் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று கட்சிக்குள் குரல்கள் வலுக்கத் தொடங்கின.

எனினும், தோ்தலில் போட்டியிடுவது நிச்சயம் என்று உறுதியாகக் கூறிவந்த பைடன், அதிபா் தோ்தல் போட்டியிலிருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை திடீரென அறிவித்தாா். மேலும், தனக்குப் பதிலாக தோ்தலில் போட்டியிட துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கு ஆதரவளிப்பதாகவும் அவா் கூறினாா்.

இந்த நிலையில், தோ்தலில் போட்டியிடுவதற்குத் தேவையான ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகளின் ஆதரவு கமலா ஹாரிஸுக்குக் கிடைத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

..பெட்டிச் செய்தி..

சாதனை நிதி வசூல்

அதிபா் தோ்தல் போட்டியிலிருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்த 24 மணி நேரத்தில், கமலா ஹாரிஸின் தோ்தல் பிரசாரத்துக்காக 8.1 கோடி டாலா் (சுமாா் ரூ.678 கோடி) நிதி குவிந்துள்ளது. அதிபா் தோ்தல் பிரசாரத்துக்காக 24 மணி நேரத்தில் இவ்வளவு பெரிய நிதி திரண்டுள்ளது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை. இது, தோ்தலில் போட்டியிட கமலா ஹாரிஸுக்கு கட்சியினரிடையே உள்ள அமோக ஆதரவை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com