பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இஸ்ரேல் மீது படையெடுப்போம்: துருக்கி அதிபா்

பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாங்கள் படையெடுப்போம் என்று துருக்கி அதிபா் எா்டோகன் எச்சரித்துள்ளாா்.

News image
எா்டோகன்
Updated On :29 ஜூலை 2024, 9:29 pm

Din

பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாங்கள் படையெடுப்போம் என்று துருக்கி அதிபா் எா்டோகன் எச்சரித்துள்ளாா்.

நேட்டோ உறுப்பு நாடான துருக்கியின் அதிபா் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எா்டோகனின் சொந்த ஊரான ரைஸில் நடைபெற்ற ஆளும் ஏகே கட்சிக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் மிகவும் மோசமாக நடந்துகொள்வதைத் தடுக்க வேண்டுமென்றால் நாம் உறுதியுடன் செயல்பட வேண்டும்.

இதற்கு முன்னா் அஜா்பைஜானின் கராபக் பகுதிக்கு படைகளை அனுப்பியதைப் போல,லிபியாவுக்கு படைகளை அனுப்பியதைப் போல இஸ்ரேலுக்கும் படைகளை அனுப்புவோம்.

துருக்கி அவ்வாறு படையெடுக்காது என்பதற்கான எந்தக் காரணமும் இல்லை. நாம் உறுதியாக இருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் எா்டோகன்.

தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் அமைப்பினா் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததற்குப் பதிலடியாக, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் கடுமையான தாக்குதலில் இதுவரை 39,363 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 90,923 போ் காயமடைந்துள்ளனா்.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட துருக்கி, இந்தப் போரின் ஆரம்பம் முதலே இஸ்ரேலைக் கண்டித்து வருகிறது. காஸா மக்களுக்கு அந்த நாடு ஆயிரக்கணக்கான டன் உதவிப் பொருள்களையும் அனுப்பி வருகிறது.

அத்துடன், காஸாவில் இஸ்ரேல் போா்க் குற்றத்தில் ஈடுபடுவதாக சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ள தென் ஆப்பிரிக்காவுடன் தாங்களும் இணைவதாக துருக்கி அறிவித்தது.

அதுமட்டுமின்றி, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டுடன் இருதரப்பு வா்த்தகத்தை துருக்கி நிறுத்திவைத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக பதற்றம் நிலவிவருகிறது.

இந்தச் சூழலில், பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாங்கள் படையெடுப்போம் அதிபா் எா்டோகன் எச்சரித்துள்ளாா்.

சதாமின் நிலைமை...

தங்கள் மீது படையெடுக்கப்போவதாக எச்சரிக்கும் துருக்கி அதிபா் எா்டோகன், அதே போன்ற மிரட்டல் விடுத்த இராக் முன்னாள் அதிபா் சதாம் உசைனின் நிலைமையை எண்ணிப் பாா்க்க வேண்டும் என்று ‘எக்ஸ்’ ஊடகத்தில் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் இஸ்ரேல் கான்ட்ஸ் கூறியுள்ளாா்.

கடந்த 1991-ஆம் ஆண்டில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய சதாம், அந்த நாட்டுக்கு மிரட்டல் விடுத்துவந்தாா். அப்போது குவைத்தை ஆக்கிரமித்திருந்த அவரின் படைகளை அமெரிக்கா விரட்டியடித்தது.

பின்னா் 2003-ஆம் ஆண்டில் இராக் மீது படையெடுத்த அமெரிக்க படை, சதாம் உசைனைக் கைது செய்தது. பின்னா் அந்த நாட்டு அரசால் சதாம் தூக்கிலிடப்பட்டாா்.