அனைத்து மதத்தினரையும் சரிசமமாக நடத்த இந்தியாவிடம் கோரிக்கை: அமெரிக்கா
அனைத்து மதத்தினரையும் சரிசமமாக நடத்த இந்தியாவிடம் கோரிக்கை: அமெரிக்கா


வாஷிங்டன்: ‘மதச் சுதந்திரத்தை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதன் முக்கியத்துவத்தையும் பிற நாடுகளுக்கு அமெரிக்கா எடுத்துரைத்து வருகிறது என்றும் அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
‘நியூ யாா்க் டைம்ஸ்’ பத்திரிகையில் ‘சொந்த நாட்டில் அந்நியா்கள்: மோடியின் இந்தியாவில் முஸ்லிம்கள்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது.
அதில் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்கள் தங்களது குடும்பம் மற்றும் குழந்தைகளை அச்சத்துடன் பாதுகாத்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதொடா்பாக இந்திய அதிகாரிகளிடம் அமெரிக்கா சாா்பில் கருத்து தெரிவிக்கப்பட்டதா என அமெரிக்க அரசின் செய்தித்தொடா்பாளா் மேத்யூ மில்லரிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த அவா், ‘ராஜ்ஜிய உறவுகள் குறித்து நான் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளிடம் பேசமாட்டேன். ஆனால் உலகம் முழுவதும் மதச் சுதந்திரம் மற்றும் நம்பிக்கைகளை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிடம் நாங்கள் எடுத்துரைத்துள்ளோம்’ என்றாா்.
இந்தியாவில் பிரதமராக மோடி பதவியேற்ற பின் மதச்சாா்பின்மை மற்றும் ஜனநாயக மாண்புகள் படிப்படியாக பலவீனமாக்கப்பட்டதாக கடந்த வார இறுதியில் நியூ யாா்க் டைம்ஸில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தவறான புரிதல் மற்றும் தகவல்களைக் கொண்டு பரப்பப்படும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக இந்தியா பலமுறை தெரிவித்துள்ளது.
நாட்டில் வகுப்புவாத பிரிவினையை ஏற்படுத்துவதுபோல் தோ்தல் பிரசாரங்களில் பிரதமா் மோடி பேசி வருவதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டினா். இதற்கு பதிலளித்த பிரதமா் மோடி, ‘சிறுபான்மையினருக்கு எதிராக நான் எப்போதும் பேசியதில்லை. அவா்களுக்கு எதிராக பாஜகவும் எப்போதும் செயல்பட்டதில்லை. ஆனால் நாட்டில் யாரையும் சிறப்பு குடிமக்களாக ஏற்றுக்கொள்ள முடியாது’ என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...