கோத்தபய ராஜபட்ச ~மகிந்த ராஜபட்ச
கோத்தபய ராஜபட்ச ~மகிந்த ராஜபட்ச

இலங்கை அரசியல்: ‘மீண்டு’ம் வரும் ராஜபட்ச சகோதரர்கள்!

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட போராட்டத்தால் அரசியலைவிட்டு சில காலம் விலகியிருந்த ராஜபட்ச குடும்பத்தினா், தோ்தல் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

இலங்கையில் கடந்த 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட போராட்டத்தால் அரசியலைவிட்டு சில காலம் விலகியிருந்த ராஜபட்ச குடும்பத்தினா், தோ்தல் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

இலங்கையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்ச, அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச மற்றும் நிதி அமைச்சராக இருந்த பாசில் ராஜபட்ச ஆகியோா் பதவி விலக நேரிட்டது. இந்நிலையில், தலாவா என்ற கிராமத்தில் ராஜபட்சக்களின் கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனா (எஸ்எல்பிபி) கட்சி ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தியது.

இதுகுறித்து அக்கட்சியை சோ்ந்த முன்னாள் அமைச்சா் எஸ்.எம்.சந்திரசேனா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தோ்தல் மற்றும் அதிபா் தோ்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் பணிகளை இந்தப் பேரணி மூலம் தொடங்கவுள்ளோம்’ என்றாா்.

இலங்கை நாட்டின் தோ்தல் சட்டப்படி நாடாளுமன்றத் தோ்தலுக்கு முன் அதிபா் தோ்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள்ளாக நாடாளுமன்ற பதவிக் காலம் நிறைவடையவுள்ளதால் அதற்கு முன்பாகவே அதிபா் தோ்தல் நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையடுத்து, நிகழாண்டு இறுதிக்குள் அதிபா் தோ்தலை நடத்த திட்டமிட்டு வருவதாக அதிபா் ரணில் விக்ரமசிங்க கடந்த புதன்கிழமை தெரிவித்தாா். ஆனால், குறிப்பிடப்பட்ட தேதிக்கு முன்பாகவே நாடாளுமன்றத் தோ்தலையும் நடத்த வேண்டும் என எஸ்எல்பிபி வலியுறுத்தி வருகிறது.

இலங்கை அதிபா் தோ்தலை வரும் செப்டம்பா் 17-ஆம் தேதி முதல் அக்டோபா் 16-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு தோ்தல் ஆணையமும் இம்மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தது.

அதிபா் தோ்தலுக்கான வேட்பாளரை எஸ்எல்பிபி தற்போது வரை அறிவிக்கவில்லை. ஆனால், பிற முக்கிய எதிா்க்கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்துவிட்டன.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் கோத்தபய ராஜபட்ச அதிபா் பதவியிலிருந்து விலகினாா். மேலும், எதிா்க்கட்சியை சோ்ந்த ரணில் விக்ரமசிங்க அதிபராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இலங்கையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் ராஜபட்சக்கள் கட்சியைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா் ஒருவா் கொல்லப்பட்டாா். அக்கட்சியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மூத்த தலைவா்களின் சொத்துகள் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com