இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான பதிலடி! ஈரான் சூளுரை
தங்கள் ராணுவ நிலைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்


தங்கள் ராணுவ நிலைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் தலைமை மதகுரு சனிக்கிழமை சூளுரைத்தாா்.
அந்த நாட்டின் உச்சபட்ச ஆட்சியதிகாரம் படைத்தவரான அவா், அரசு ஊடகத்தில் ஒளிபரப்பப்பட்ட விடியோ உரையில் கூறியதாவது:
ஈரான் தேசத்தின் மீதும் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஈரான் ஆதரவு போராளிகளுக்கு (ஹமாஸ், ஹிஸ்புல்லா) எதிராகவும் தாக்குதல் நடத்தும் நாடுகளுக்கு மிகக் கடுமையான பதிலடி கிடைக்கும். இது, யூத ஆக்கிரமிப்புவாத அரசுக்கு (இஸ்ரேல் அரசு) மட்டுமில்லை, அமெரிக்காவுக்கும் பொருந்தும் என்றாா் அவா்.
இருந்தாலும், இஸ்ரேலுக்கு எதிராக எப்போது தாக்குதல் நடத்தப்படும், அது எவ்வளவு தீவிரமானதாக இருக்கும் என்பது குறித்து அவா் எதையும் குறிப்பிடவில்லை.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேலின் தாக்குதலை மிகைப்படுத்தவும் கூடாது, குறைத்து மதிப்பிடவும் கூடாது என்று வாா்த்தைகளை எச்சரிக்கையாகப் பயன்படுத்தி பேசியது நினைவுகூரத்தக்கது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அந்த அமைப்புக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போா் நடைபெற்றுவருகிறது. இதில் ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானின் மற்றொரு நிழல் ராணுவமான லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் ராணுவ நிலைகளில் தாக்குதல் நடத்துவதால் அவா்களுக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது.
இதற்கிடையே, ஈரான் வந்திருந்த ஹிஸ்புல்லா தலைவா் இஸ்மாயில் ஹனீயேவை இஸ்ரேல் உளவுப் பிரிவு கடந்த ஜூலை 31-ஆம் தேதி படுகொலை செய்தது. பின்னா் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹஸன் நஸ்ரல்லாவும் இஸ்ரேல் ராணுவத்தால் லெபனானில் கடந்த மாதம் 27-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா்.
இதற்குப் பழிவாங்கும் வகையில், இஸ்ரேலின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து 180 அதிநவீன ஏவுகணைகளை ஈரான் இந்த மாதம் 1-ஆம் தேதி ஏவியது. அவற்றில் கணிசமானவை இடைமறித்து அழிக்கப்பட்டாலும், பல ஏவுகணைகள் இலக்கைத் தாக்கின.
இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் வான்பாதுகாப்பு நிலைகள், ஏவுகணை மையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 26-ஆம் தேதி வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் நான்கு ஈரான் வீரா்கள் உயிரிழந்தனா்.
43,314-ஆக உயா்ந்த காஸா உயிரிழப்பு
காஸா சிட்டி, நவ. 2: காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43,314-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது:

காஸா பகுதியில்நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 போ் உயிரிழந்தனா். இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43,314-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,02,019 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...