தெற்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
காஸாவின் கிழக்கு கான் யூனிஸ் நகருக்குட்பட்ட ஷேக் நாஸர் பகுதியில் டிரோன்கள் மூலம் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் அப்பகுதியிலிருந்த குழந்தைகள் உள்பட பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. படுகாயம் அடைந்தவர்களை மருத்துவ உதவியாளர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், இந்தத் தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு மற்றும் மத்திய காஸாவில் ஹமாஸ் படையினருக்குச் சொந்தமான ஆயுதக் கிடங்குகள் மற்றும் முகாம்களைக் குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி முன்னேறின எனக் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பிய குழுவுடன் பேச்சு
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ரமல்லாஹ் பகுதியில் பாலஸ்தீன வெளியுறவுத் துறை அமைச்சர் வர்சென் ஷாஹின், ஐரோப்பிய நாடாளுமன்ற தூதுக்குழுவினரை வரவேற்றார்.
இதில், காஸாவின் தற்போதைய போர் சூழல் குறித்து ஷாஹின் எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.
மேலும், காஸாவில் படுகொலைகளை நிறுத்த சர்வதேச நட்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் மற்றும் பாலஸ்தீனிய மக்களின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையிலான சர்வதேச நீதிமன்ற தீர்ப்புகளை கட்டியெழுப்புவது குறித்து விவாதித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி காஸாவின் ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் பதுங்கியுள்ள காஸாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையும் படிக்க | ஈரானுக்கு ஐ.நா. எச்சரிக்கை! உள்ளாடை மட்டுமே அணிந்து போராடிய பெண்ணுக்கு வலுக்கும் ஆதரவு!