பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி நூற்றுக்கும் அதிகமான பெண்கள் மேலாடையின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பு உடை அணிந்து சாலையில் குவிந்த பெண்கள் மேலாடைகளைக் கழற்றி, கையில் கரும் புகைகளைக் கக்கும் கருவிகளை ஏந்தியவாறு, கருப்புத் துணிகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் மார்பில், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் குர்திஷ் மொழிகளில் பெண்ணுரிமை கோரும் வகையிலான சொற்களை எழுதியிருந்தனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச நாளையொட்டி (நவ. 25) சர்வதேச பெண்கள் உரிமைகள் இயக்கம் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளது.
இந்தப் போராட்டம் குறித்து பெண்கள் விடுதலை இயக்கம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சர்வதேச பெண்கள் உரிமைகள் இயக்கம் மற்றும் பெண்கள் விடுதலை இயக்கம் சார்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான பெண் ஆர்வலர்கள் பாரீஸில் சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இறையாட்சி, சர்வாதிகாரங்கள், போர்கள் மூலம் ஒடுக்கப்படும் பெண்களுக்காக இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்ஸ், இத்தாலியில் பேரணி
முன்னதாக பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள், பெண்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டனர்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் என பல்வேறு விதங்களில் பெண்கள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெற்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச நாளாக நவம்பர் 25 ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பிரச்னைகள், பெண்களுக்கு எதிராக மறைக்கப்படும் உண்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட 1,000 மருத்துவப் பணியாளர்கள்!