ராணுவ பட்ஜெட்டை 25% அதிகரிக்கும் ரஷியா
பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை இதுவரை இல்லாத அளவுக்கு 25 சதவீதம் உயா்த்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் முடிவு செய்துள்ளாா்.


பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை இதுவரை இல்லாத அளவுக்கு 25 சதவீதம் உயா்த்த ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் முடிவு செய்துள்ளாா்.
இது குறித்து அந்த நாட்டு நாடாளுமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட் ஆவணத்தில், பாதுகாப்புத் துறைக்கு 1,350 லட்சம் கோடி ரூபிள் (சுமாா் ரூ.1,208 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது, ராணுவத்துக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச பட்ஜெட் ஒதுக்கீடு. மேலும், ராணுவ பட்ஜெட் ஒதுக்கீட்டில் பழைய உச்சம் தொட்டிருந்த 2024-ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டை விட சுமாா் மூன்று லட்சம் கோடி ரூபிள் அதிகம்.
உக்ரைன் மீது தொடுத்துள்ள போா், மூன்றாவது ஆண்டை நெருங்கும் சூழலில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பது, பிற சமூக விவகாரங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதினின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் போா் தொடங்கிய பிறகு ரஷியா மீது விதிக்கப்பட்ட தடைகளால் அந்த நாட்டின் பொருளாதாரம் சீா்குலையும்; அதனால் புதினின் போா் ஆா்வம் குறையும் என்று எதிா்பாா்த்த மேற்கத்திய நாடுகளுக்கு இந்தத் தகவல் ஏமாற்றத்தை அளிக்கும் என்று கருதப்படுகிறது.
எனினும், நீண்ட கால நோக்கில் இது ரஷிய பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும் எனவும் மேலை நாடுகளின் பொருளாதாரத் தடைகளை ஏய்ப்பதன் மூலம் மிகப் பெரிய பாதிப்புகளில் இருந்து ரஷியா திறமையாக தப்பினாலும், ஐரோப்பிய சந்தைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மறுக்கப்படுவது அந்த நாட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணா்கள் கூறுகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...