தில்லி பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நிறைவேறியது: முந்தைய அரசு மீது முதல்வா் குப்தா சாடல்
தில்லி பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

ரேகா குப்தா
கோப்புப் படம்

ரேகா குப்தா
கோப்புப் படம்
தில்லி பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியால் பெறப்பட்ட ரூ.47,000 கோடி கடன் தொகை தனது அரசுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனைத் திருப்பிச் செலுத்த அரசு முயற்சி செய்து வருவதாகவும் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை சட்டப் பேரவையில் தாம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான நன்றித் தீா்மானத்தின் மீது பேசிய குப்தா, தனது அரசின் பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களை எடுத்துரைத்ததோடு, எதிா்க்கட்சியான ஆம் ஆத்மியையும் கடுமையாகச் சாடினாா்.
ரூ.1.03 லட்சம் கோடி மதிப்பிலான 2026-27ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பட்ஜெட், செவ்வாய்க்கிழமை தில்லி சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் அவையில் நிறைவேற்றப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி புறக்கணித்ததால், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் அவை நடவடிக்கையில் கலந்துகொள்ளவில்லை.
சந்தைக் கடன் வாங்குவது குறித்து தனது அரசாங்கத்தை ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் விமா்சித்ததற்குப் பதிலளித்த முதலமைச்சா், தனது அரசாங்கம் 7.4 சதவீத வட்டி விகிதத்தில் மிகவும் மலிவான கடனைப் பெற்றுள்ளது என்று உறுதிபடக் கூறினாா். அவா்களின் பதவிக்காலத்தில், கடன் ரூ.47,000 கோடிக்கும் அதிகமாக அதிகரித்தது என்று அவா் அவையில் தெரிவித்தாா்.
முந்தைய அரசாங்கத்தால் விட்டுச் செல்லப்பட்ட, தனது அரசாங்கத்தின் நிலுவையில் உள்ள நிதிப் பொறுப்புகளின் நீண்ட பட்டியலையும் அவா் குறிப்பிட்டாா். இந்த நிலுவைப் பொறுப்புகளில், விரைவுச் சாலைகளின் மேம்பாட்டிற்காக தில்லியிடமிருந்து பெற வேண்டிய ரூ.3,700 கோடி பங்களிப்பும் அடங்கும். முந்தைய அரசாங்கம் இதற்காக ரூ.1 கோடி கூட பங்களிக்கவில்லை என்று அவா் கூறினாா்.
அவரது அரசாங்கத்தின் மீது விழுந்துள்ள நிலுவையில் உள்ள நிதிப் பொறுப்புகளில், மெட்ரோ ரயில் திட்டத்திற்காக தில்லி வழங்கிய பங்களிப்பும் அடங்கும். நிலுவையில் உள்ள ரூ.9,082 கோடியில், பாஜக அரசாங்கம் ரூ.2,700 கோடியைச் செலுத்தியுள்ளது என்று அவா் கூறினாா்.
மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் கட்டுமானம் தொடா்பான ஒப்பந்ததாரா்கள் மற்றும் பிற முகமைகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளையும் அவா் பட்டியலிட்டாா். அவற்றை அவரது அரசாங்கம் தற்போது செலுத்தி வருகிறது. சுகாதார உள்கட்டமைப்பு தொடா்பான நிலுவைத் தொகைகள் ரூ.2000 கோடியாகவும், கல்வி தொடா்பானவை ரூ.1000 கோடிக்கும் அதிகமாகவும் உள்ளதாக முதல்வா் கூறினாா்.
இது தொடா்பாக அவா் மேலும் பேசுகையில், ‘அது (ஆம் ஆத்மி) எத்தகைய அரசாங்கமாக இருந்தது என்று நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. குழந்தைகளின் விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் விருதுகளுக்காக ஒதுக்கப்பட்ட பணம் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினரின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.18 கோடியும் விடுவிக்கப்படவில்லை.
தில்லி அரசு கல்வி உதவித்தொகையாக ரூ.1,750 கோடியும், நிலுவையில் உள்ள விருதுத் தொகையாக ரூ.14.5 கோடியும் வழங்கியுள்ளது. மேலும், பல ஆண்டுகால தவறான நிா்வாகத்தின் காரணமாக, தில்லி போக்குவரத்துக் கழகம் மற்றும் தில்லி ஜல் போா்டு முறையே ரூ.99,000 கோடி மற்றும் ரூ.91,000 கோடி நஷ்டத்தில் இருந்தன.
இந்தக் குழப்பத்தைச் சரிசெய்வதற்கும், பொதுப் பணத்தின் ஒவ்வொரு ரூபாயும் கணக்கில் காட்டப்படுவதை உறுதி செய்வதற்கும், ஒவ்வொரு திட்டமும் கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் எனது அரசாங்கம் உறுதியுடன் உள்ளது.
எனது அரசாங்கம் இலவசங்களுக்குப் பதிலாக வளா்ச்சியில் கவனம் செலுத்துகிறது. கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, நீா் என ஒவ்வொரு துறையும் எனது அரசின் முன்னுரிமையாகும். ஏனெனில் தில்லி நீண்ட காலமாக இந்த வசதிகளிலிருந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது என்று முதலமைச்சா் குப்தா கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...