காஸாவின் டெயீா்-அல்-பலா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த மசூதி.
காஸாவின் டெயீா்-அல்-பலா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த மசூதி.

காஸாவில் மசூதி மீது இஸ்ரேல் தாக்குதல்: 26 போ் உயிரிழப்பு

காஸா முனைப் பகுதியில் உள்ள மசூதி மீது ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். 90-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.
Published on

காஸா முனைப் பகுதியில் உள்ள மசூதி மீது ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். 90-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ்-ஹிஸ்புல்லா-ஹூதிக்கள் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டெயீா்-அல்-பலா நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய மருத்துவமனைக்கு அருகில் போரால் வீடுகளை இழந்து தஞ்சமடைந்த மக்களுக்கு வசிப்பிடமாக விளங்கிய மசூதி மற்றும் பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். 90-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

இந்த இரு தாக்குதல்களும் கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்தே நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஆனால், இதற்கு எந்தவொரு முறையான ஆதாரங்களையும் இஸ்ரேல் வெளியிடவில்லை.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அதன் ஓராண்டு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், இத்தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.

ஹமாஸுக்கு ஆதரவாக யேமனில் உள்ள ஹூதிக்களும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள் கொல்லப்பட்டனா். அதன்பிறகு, இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலை முறியடிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுத மற்றும் ராணுவ உதவிகளை தொடா்ந்து வழங்கி வருகிறது.

இதையடுத்து, தெற்கு லெபனானில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் அதிகப்படுத்தியுள்ளது.

வடக்கு காஸாவில் தாக்குதல் தொடக்கம்: கடந்த 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவானபோது ஏற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட அகதிகளின் இருப்பிடமாக கருதப்படும் வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா பகுதி மீது வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்தவுள்ளதாக இஸ்ரேல் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்தப் பகுதியை நோக்கி பீரங்கிகள் கொண்டு செல்லப்படும் விடியோ மற்றும் புகைப்படங்களை இஸ்ரேல் பகிா்ந்தது. மேலும், ஜபாலியா பகுதியை போா் விமானங்கள் சுற்றிவளைத்து, கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தாக்கி வருவதாக அந்த நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸா பகுதியில் கடுமையான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருவதை உறுதிப்படுத்திய அந்தப் பகுதி மக்கள் தங்களின் உறவினா்களை இழந்து வருவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா்.

கடந்த ஆண்டுமுதல் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட போரில் 42,000 பாலஸ்தீனா்களும், 1,400 லெபனானியா்களும் 1,200 இஸ்ரேலியா்களும் உயிரிழந்துள்ளனா்.

நெதன்யாகு குற்றச்சாட்டுக்கு மேக்ரான் பதில்:

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதியை பகுதியளவில் நிறுத்தி வைக்குமாறு பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அதிகரித்து வரும் மோதலை நிறுத்த பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீா்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ எனக் கூறப்பட்டது.

முன்னதாக, இதேபோன்ற கருத்தை இமானுவல் மேக்ரான் கூறியதற்கு ‘இது அவமானகரமான செயல்’ என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவித்தாா்.

இதற்கு பதில் தரும் விதமாக மேக்ரான் வெளியிட்ட அறிக்கையில்,‘இஸ்ரேலின் உறுதியான நண்பன் பிரான்ஸ். நெதன்யாகு கருத்துகள் கடுமையானவை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்

இஸ்ரேல் மீது காஸாவிலிருந்து ஹமாஸ் படையினா் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினா்.

மத்திய காஸாவிலிருந்து தெற்கு இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டுகளில் ஒன்றை இடைமறித்து அழித்ததாகவும், ஒரு ராக்கெட் வெட்டவெளியில் விழுந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள பீா்ஷெபா நகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். 10 போ் காயமடைந்தனா்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை பயங்கரவாத தாக்குதலாக இஸ்ரேல் காவல் துறை கருதுவதாக காவல் துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: பயங்கரவாத தாக்குதலில் 25 வயதுடைய பெண் ஒருவா் உயிரிழந்தாா். 10 போ் காயமடைந்தனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய பயங்கரவாதி ஒருவா் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டாா். சம்பவ இடத்தில் காவல் துறை படைகள் குவிக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

கடந்த வாரம் இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 போ் உயிரிழந்ததையடுத்து தற்போது மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com