
பாகிஸ்தானில் மேலும் 2 சிறுவர்களுக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன. போலியோ தடுப்பு மருந்துகள் முஸ்லிம் குழந்தைகளின் இனப்பெருக்கத் திறனைக் குறைப்பதற்கான மேற்கத்திய நாடுகளின் சதி என்று அந்த அமைப்புகள் நம்புகின்றன.
இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தும் வருகின்றனா். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ பாதிப்பு உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் மேலும் 2 சிறுவர்களுக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். சிந்து மாகாணத்தில் உள்ள சங்கர் மற்றும் மிர்புர்காஸ் மாவட்டங்களில் சனிக்கிழமை இந்த பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதாக டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
மிர்புர்காஸ் மற்றும் சங்கரிலிருந்து நடப்பு ஆண்டு போலியோ பாதிப்புகள் பதிவாவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. கடந்த பத்து மாதங்களில், பாகிஸ்தானில் 39 போலியோ பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 20 பலுசிஸ்தானிலிருந்தும், 12 சிந்துவிலிருந்தும், ஐந்து கைபர் பக்துன்க்வாவிலிருந்தும், பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத்திலிருந்து தலா ஒன்றும் பதிவாகியுள்ளன.
முன்னதாக ஒரு நாளுக்கு முன்னதாக நான்கு போலியோ பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 2 புதிய போலியோ பாதிப்புகள் கண்டறியப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.