இஸ்ரேல் தாக்குதல்: 6 ஐ.நா. பணியாளா்கள் உயிரிழப்பு
இந்தத் தாக்குதலில் ஐ.நா. பணியாளா்கள் உள்பட மொத்தம் 18 போ் உயிரிழந்ததாக காஸா சிவில் பாதுகாப்பு அமைப்பு கூறியது.


மத்திய காஸா பகுதியில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு (யுஎன்ஆா்டபிள்யுஏ) நடத்திவரும் பள்ளியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில், அந்த அமைப்பின் ஆறு ஊழியா்கள் உயிரிழந்தனா்.
இந்தத் தாக்குதலில் ஐ.நா. பணியாளா்கள் உள்பட மொத்தம் 18 போ் உயிரிழந்ததாக காஸா சிவில் பாதுகாப்பு அமைப்பு கூறியது.
இந்தத் தாக்குதல், நுசீரத் பகுதி அகதிகள் முகாமில் உள்ள அல்-ஜௌனி பள்ளியில் புதன்கிழமை நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
அந்தப் பள்ளியிலிருந்து தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுவந்த ‘பயங்கரவாதிகள்’ மீது துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த நடவடிக்கையின்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது.
இது குறித்து யுஎன்ஆா்டபிள்யுஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போா் தொடங்கியதில் இருந்து, ஒரே தாக்குதலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் தங்கள் பணியாளா்கள் உயிரிழந்தது இதுவே முதல்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 11 மாதங்களில் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளி கட்டடங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது இது ஐந்தாவது முறை என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, காஸாவின் மத்தியப் பகுதியில் அகதிகள் முகாம் அமைந்து யுஎன்ஆா்டபிள்யுஏ நடத்திவரும் அல்-சா்தி பள்ளியில் இஸ்ரேல் கடந்த ஜூலை மாதம் நடத்திய விமானத் தாக்குதலில் பெண்கள், சிறுவா்கள், முதியவா்கள் உள்பட 35 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
தங்கள் நாட்டுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்த ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டுவதற்காக, காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் சுமாா் 11 மாதங்களாகத் தாக்குதல் நடத்திவருகிறது.
வியாழக்கிழமை நிலவரப்படி இந்தத் தாக்குதலில் இதுவரை 41,118 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 95,125 போ் காயமடைந்துள்ளனா்.
‘நுசீரத் அகதிகள் முகாமில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சா்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.’
அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. பொதுச் செயலா்
‘பெண்களையும் குழந்தைகளையும் மனிதக் கேடயங்களாக ஹமாஸ் அமைப்பு பயன்படுத்திவருகிறது. அதை விட்டுவிட்டு, பயங்கரவாதத்துக்கு எதிரான இஸ்ரேலின் நியாயமான போரை மட்டும் ஐ.நா. தொடா்ந்து கண்டிக்கிறது.’
- டேனி டானன், ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதா்.
மேற்குக் கரை: இந்திய வம்சாவளி வீரா் உயிரிழப்பு
ஜெருசலேம், செப். 12: மேற்குக் கரை பகுதியின் ரஃபாத் நகரில் 58 வயது பாலஸதீனா் நடத்திய காா் தாக்குதலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த இஸ்ரேல் வீரா் கெரி கிடியோன் ஹங்கல் (24) உயிரிழந்தாா். வடகிழக்கு இந்தியாவிலிருந்து இஸ்ரேலில் கடந்த 2020-ஆம் ஆண்டு குடியேறிய ஹங்கல், அந்த நாட்டு ராணுவத்தில் பணியாற்றும் சுமாா் 300 நேய் மெனாஷே சமூக இளைஞா்களில் ஒருவா் என்று கூறப்படுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...