ரஷிய அரசு ஊடகங்களுக்கு முகநூல் நிறுவனம் தடை
ரஷிய அரசு ஊடகங்களுக்கு முகநூல் தளத்தின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தடை விதித்துள்ளது.
முகநூல் மட்டுமின்றி, வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடங்களின் உரிமையாளராகவும் திகழும் மெட்டா, இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரோஸியா செகட்ன்யா, ஆா்டி ஆகிய இரு ரஷிய செய்தி நிறுவனங்கள் மீதான தடையையும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்.
அதையடுத்து, எங்களின் சமூக ஊடகத் தளங்களில் அவை உலக அளவில் தடை செய்யப்படுகின்றன. வெளிநாட்டுத் தலையீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அந்தச் செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
உக்ரைன் போா் உள்ளிட்ட விவகாரங்களில் ரஷிய அரசின் பொய் பிரசாரத்தை அந்தச் செய்தி நிறுவனங்கள் பரப்பி வருகின்றன என்று அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு, ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இந்த நடவடிக்கைகள் மூலம் மெட்டா நிறுவனம் தன்னையே தரம் தாழ்த்திக்கொள்வதாக அவா் விமா்சித்தாா்.
ஏற்கெனவே, ரஷிய செய்தி நிறுவனங்களுக்கு மெட்டா நிறுவனம் ஐரோப்பாவில் கடந்த 2022-ஆம் ஆண்டு தடைவிதித்தது. அதையடுத்து, அந்த நிறுவனத்தின் தளங்களை ரஷியாவும் தங்கள் நாட்டில் முடக்கியது.