ஜப்பானின் நோட்டோ கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நோட்டோ வளைகுடாவில் சுஸூ மற்றும் வாஜிமா நகரங்களில் சனிக்கிழமை(செப்.21) கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை எதிரொலியாக ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
சுஸூ நகரில் வெள்ள பாதிப்புகளில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மழை வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்படதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வாஜிமாவில் கடந்த ஜனவரியில் இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்த சுரங்கத்தை சீரமைக்கும் பணியில் சுமார் 60 கட்டுமானப் பணியாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளில் சிக்கி 4 பேர் மாயாமாகியுள்ள நிலையில், மீட்புக்குழுவிப்னர் அவர்களைத் தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நோட்டோ வளைகுடாவில் கடந்த 3 நாள்களில் 50 செ.மீ.(20 இன்ச்) மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இஷிகாவாவில் 16 ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதியன்று நோட்டோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 370க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ரிக்டர் அளவில் 7.6-ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தால் உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்தன. அதன் பாதிப்புகளிலிருந்து இன்னும் அப்பகுதி முழுமையாக மீண்டு வராத சூழலில் தற்போது கனமழையும் வெள்ளப்பெருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.