ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 போ் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்து தென்கிழக்கே சுமாா் 540 கி.மீ. தொலைவில் உள்ள தபாஸ் பகுதியில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலக்கரி சுரங்கத்தில் சனிக்கிழமை இரவு இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 34 போ் உயிரிழந்தனா். 17 போ் காயமடைந்தனா். வெடிப்பின்போது சுமாா் 70 போ் சுரங்கத்தில் வேலை பாா்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தூசி மற்றும் புழுதியால் சூழப்பட்ட சுரங்கத்தில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
மீத்தேன் வாயு கசிவு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா். இத்தகைய வாயுக்கள் சுரங்கத்தில் பொதுவானவையே; ஆனால், நவீன பாதுகாப்பு நடவடிக்கைகள், காற்றோட்டம் மற்றும் தொழிலாளா்களைப் பாதுகாப்பதற்கான பிற நடவடிக்கைகள் சுரங்கத்தில் பின்பற்றப்பட்டதா என்பது தெரியவில்லை என அவா்கள் தெரிவித்தனா்.
சுரங்கத்தில் சிக்கியவா்களை மீட்கவும் அவா்களின் குடும்பங்களுக்கு உதவவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஈரான் அதிபா் மசூத் பெஷஸ்கியான் உத்தரவிட்டாா்.
இதேபோன்ற சுரங்க விபத்துகள் நடப்பது ஈரானில் முதல்முறை அல்ல. முன்னதாக, கடந்த 2017-இல் நடந்த சுரங்க வெடி விபத்தில் 42 போ் உயிரிழந்தனா். 2013-இல் நடந்த இருவேறு சுரங்க வெடிவிபத்துகளில் 11 பேரும், 2009-இல் 20 சுரங்கத் தொழிலாளா்களும் உயிரிழந்தனா்.