லெபனான் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 50 பேர் பரிதாபமாக பலியாகினர்.
வான்வழித் தாக்குதல்
காஸா போரில், பாலஸ்தீன ஹமாஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழு வடக்கு இஸ்ரேல் பகுதியில் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்த நிலையில், ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுக்கு எதிராக லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.
பேஜர் தாக்குதல்
கடந்த வாரம், லெபனானில் பரவலாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவைச் சேர்ந்தோர் பயன்படுத்தும் பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், சைபர் வழி தாக்குதல்கள் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டன.
இந்தக் கோர வெடிவிபத்துகளில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 போ் கொல்லப்பட்டனா்.
லெபனான் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தாக்குதல்
இந்தநிலையில், ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்திட இஸ்ரேல் விமானப் படைகள் முனைப்பு காட்டி வருகின்றன. தெற்கு லெபனானில் கிராமங்கள், நகரப் பகுதிகள் உள்பட மொத்தம் 19 இடங்களை ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் ஆயுதக் கிடங்குகளாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள வரைபடத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதில் 50 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்தத் தாக்குதலுக்கு 300 க்கும் மேற்பட்டோர் படுகாயாமடைந்துள்ளனர்.