தெற்காசியா நாடுகளிடையே, புவிசார் அரசியல் சலசலப்புகளைத் தவிர்க்க விரும்புவதாகத் தெளிவுபடுத்தியிருக்கும் இலங்கை அதிபர் அநுர குமார, இந்தியா - சீனா இடையே சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தது தற்போது வைரலாகியிருக்கிறது.
இலங்கையின் முதல் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அதிபர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் அநுர குமார திஸ்ஸநாயக, இலங்கை, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தபோது, இவ்விரு நாடுகளுமே, மிகச்சிறந்த உதவியை செய்திருந்ததை மறுக்க முடியாது என்று கூறியிருந்த அநுர குமார, ஆனாலும், புவிசார் அரசியலுக்குள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
இது அவர் தற்போது பேசியது அல்ல என்றும், செப்டம்பர் முதல் வாரத்தில், அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது கூறிய தகவல்கள் தற்போது வைரலாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு புவிசார் அரசியலமைப்பில், பல அதிகார அமைப்புகள் இருக்கும், ஆனால், அந்த அதிகாரச் சண்டைக்குள், எந்த அமைப்பினருடனும் நாம் கூட்டு சேர முடியாது, குறிப்பாக இந்தியா - சீனா இடையே நாம் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. இரு நாடுகளுமே நமக்கு சிறந்த நண்பர்கள், அவர்களுடனான நட்பை மேலும் நெருக்கமானதாக்கிக் கொள்ளலாம் இரு நாடுகளுமே மிகவும் தேவையான நேரத்தில், இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கியது என்பதை ஒப்புக்கொண்ட அவர், மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன்கூட நெருக்கமான உறவுகளை விரும்புவதாகக் கூறினார்.
இலங்கை புதிய அதிபர்
இலங்கையின் ஒன்பதாவது அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, முந்தைய தோ்தலில் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட கோத்தபய ராஜபட்ச ஆட்சியிலிருந்து மக்கள் போராட்டத்தின் மூலம் அகற்றப்பட்டதற்குப் பிறகு நடைபெற்ற முதல் அதிபா் தோ்தல். இதில் அநுர குமார திஸ்ஸநாயக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, தலைநகா் கொழும்பிலுள்ள அதிபா் செயலகத்தில் அநுரகுமார அதிபராக பொறுப்பேற்றாா்.