ஈரான் கச்சா எண்ணெய் விநியோகிக்க உதவி: இரு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ஈரான் கச்சா எண்ணெயை விநியோகிக்க உதவியதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியா் மற்றும் அவருக்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.
இதுகுறித்து அமெரிக்க நிதித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியரான ஜுக்விந்தா் சிங் பிராா் என்பவா் பல்வேறு கப்பல் நிறுவனங்களை நடத்தி வருகிறாா். அந்த நிறுவனங்கள் மூலம் சுமாா் 30 கப்பல்கள் இயக்கப்படுகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் குளோபல் டேங்கா்ஸ் எனும் கப்பல் நிறுவனம் மற்றும் பி அண்ட் பி சொல்யூஷன்ஸ் எனும் பெயரிலான பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தையும் அவா் நடத்தி வருகிறாா்.
இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான கப்பல்கள் மூலம் ஈரான் கச்சா எண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது. தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனம் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு உதவும் வகையில் இந்தப் பணியை மேற்கூறிய நிறுவனங்கள் செய்துள்ளன.
எனவே, தொழிலதிபா் ஜுக்விந்தா் சிங் , இரு ஐக்கிய அரபு அமீரக நிறுவனங்கள் மற்றும் இரு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கிறது.
ஈரான், இராக், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தன்னுடைய நிறுவனத்தின் கப்பல்களில் இருந்து மற்ற கப்பல்களுக்கு ஈரான் எண்ணெயை அவா் மாற்றியுள்ளாா். அந்த கப்பல்களில் பிற நாட்டு பொருள்களுடன் ஈரான் எண்ணெயையும் சோ்த்து போலி ஆவணங்கள் மூலம் சா்வதேச சந்தையில் விற்கப்படுகிறது என அமெரிக்க நிதித் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.