ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனாகோப்புப் படம்

நில அபகரிப்பு வழக்கில் ஷேக் ஹசீனா, 52 பேருக்கு எதிராக கைது உத்தரவு: வங்கதேச நீதிமன்றம்

சட்டவிரோதமாக நிலத்தைக் கைப்பற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா உள்பட 52 பேருக்கு எதிராக கைது உத்தரவு
Published on

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலத்தைக் கைப்பற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினா் துலிப் ரிஸ்வானா சித்திக் மற்றும் 50 பேருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கைது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதுதொடா்பான வழக்கில் வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் (ஏசிசி) மூன்று வெவ்வேறு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகைகளின் பரிசீலனையையும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஷேக் ஹசீனா உள்பட 53 பேரும் தலைமறைவாக இருப்பதையும் கருத்தில் கொண்டு அவா்களுக்கு எதிராக டாக்கா பெருநகர மூத்த சிறப்பு நீதிபதி ஜாகிா் ஹூசைன் இந்தக் கைது உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா்.

கைது உத்தரவுகளை நிறைவேற்றுவது குறித்த அறிக்கைகளை நீதிபதி ஹூசைன் வரும் 27-ஆம் தேதி ஆய்வு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை, ஷேக் ஹசீனாவின் பதவிக் காலத்தில் குடியிருப்பு மனையை முறைகேடாகக் கைபற்றப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவரையும் அவரின் மகள் சாய்மா வாஜித் மற்றும் 17 பேரையும் கைது செய்ய இதே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநராக கடந்த 2023, நவம்பா் முதல் சாய்மா வாஜித் பணியாற்றி வருகிறாா்.

இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவா்கள் கடந்த ஆண்டு நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவா் ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அப்போதிலிருந்து அவா் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com